
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகில் உள்ளது தொ.செங்கமேடு கிராமம். இங்குள்ள முத்துமாரியம்மன் கோவில் ஊருக்கு முகப்பில் ஏரிக்கரையில் அழகுற அமைந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்புதான் கோவில் புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்படிப்பட்ட கோவிலின் வெளிப்பக்கம் அதன்பின் பக்கம் இரும்பு கிரில் கேட் போடப்பட்டு அவை இரவு நேரங்களில் பூட்டப்பட்டிருக்கும். மேலும் எந்த நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள அந்த பகுதியில் நேற்று இரவு கோவிலின் முன்பக்க பூட்டை உடைத்து கேட்டைத் திறந்த கொள்ளையர்கள் உள்ளே சென்றுள்ளனர். அங்கு அம்மன் சன்னதிக்கு முன்புறம் இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் சில்லறை ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
அதே போன்று ஆவட்டி கிராமத்தில் உள்ள அய்யனார் கோவில், மாரியம்மன் கோவில் ஆகியவற்றிலும் பூட்டப்பட்டிருந்த கேட்டை உடைத்து உள்ளே சென்று உண்டியலை உடைத்து கொள்ளை அடித்து சென்றுள்ளனர். அதேபோல் மேல் ஆதனூர் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோவில் கேட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் அங்கிருந்த உண்டியலையும் உடைத்து அதில் இருந்த பணம் சில்லறை ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இப்படி கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். நேற்று 4 கோவில்களின் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். காவல்துறை அதிகாரிகள் சம்பவம் நடந்த கோவில்களுக்கு நேரில் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தியுள்ளனர்.
திட்டக்குடி பகுதியில் ஒரே இரவில் நான்கு கோவில்களில் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டிய சம்பவம் அப்பகுதி கிராம மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கிராம மக்கள் இரவு நேரங்களில் கிராம கோவில்களுக்கு காவலர்களை நியமிக்க வேண்டும். மேலும் காவலர்கள் கிராமப்புறங்களுக்கு கடந்த காலங்களில் ரோந்து பணிக்கு வருவார்கள். தற்போது அது போன்று இரவு ரோந்து பணிக்கு கிராமப்புறங்களை நோக்கித் காவலர்கள் வருவதில்லை. எனவே காவல்துறை இரவு நேரங்களில் கூடுதல் காவலர்களை நியமிக்க வேண்டும். அவர்கள் கிராமப்புறங்களை அவ்வப்போது இரவு நேரங்களில் சென்று கண்காணித்தால் இதுபோன்ற கொள்ளை நடப்பது தடுக்கப்படும். இதன் மூலம் கிராமப் புறங்களில் உள்ள வீடுகளில் கொள்ளை அடிப்பதையும் தடுப்பதற்கு வாய்ப்புண்டு.