Skip to main content

கணவன் கண்முன்னே மனைவிக்கு நடந்த சோகம்; அதிர்ச்சியில் மக்கள்

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
 robbers stole the thali of the house in front of the husband

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரம், அட்வகேட் ராமநாதன் தெருவை சேர்ந்தவர் 85 வயதான மணி. ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி 73 வயதான ராஜேஸ்வரி. இருவரும் இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர். வீட்டுக்கு அருகில் சாலையில் ஸ்பீடு பிரேக் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏறி இறங்கி மேட்டில் வாகனம் ஏறுவதில் சிரமம் இருப்பதால் மனைவியை கீழே இறக்கிவிட்டுள்ளார்.

சில மீட்டர் தூரத்தில் வீடு இருந்ததால் நடந்துவருகிறேன் என ராஜேஸ்வரி சொன்னதால் இவர் மெல்ல வண்டி ஓட்டிக்கொண்டு வீட்டுக்கு சென்று வண்டியை நிறுத்திவிட்டு மனைவிக்காக வெளியிலேயே காத்து நின்றுகொண்டு நின்றிருந்தார். அப்போது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த வந்த மர்ம நபர்கள் ராஜேஸ்வரியின் கழுத்தில் இருந்த சுமார் 8 சவரன் தங்க சங்கிலியை கண் இமைக்கும் நேரத்தில் பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் பறந்துபோயினர்.

தனது கழுத்தில் இருந்த தங்க சங்கிலியைப் பறித்துக்கொண்டு சென்றதால் அதிர்ச்சியாகி அழுது கத்தியுள்ளார், மனைவியின் அலறல் சத்தத்தைக் கேட்டு அவர் வேகவேகமாக ஓடிவந்தார். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். நடந்ததை சொன்னதும் அனைவரும் அதிர்ச்சியாகினர், இதுபற்றி போலீஸாருக்கு தகவல் கூறினர். சம்பவ இடத்துக்கு வந்த ஒரே ஒரு போலீஸ் என்ன நடந்தது என விசாரணை நடத்திவிட்டு சென்றார்.

வயதான இவர்கள் நேரடியாக காவல்நிலையம் சென்று புகார் தந்தபின் முதல்கட்டமாக வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்ற நடைமுறையை கடைப்பிடிக்காமல் தேடுகிறோம் எனச்சொல்லி அனுப்பினர். இந்தக் கொள்ளை விவகாரம் வெளியே வந்த பின்பே வழக்கு வாங்கி பதிவு செய்த திருப்பத்தூர் நகர போலீசார், அந்த சாலையில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி அதனை வைத்து கொள்ளையர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆள் நடமாட்டம் இருக்கும் பகுதியில் இரவு நேர தொடக்கத்தில் இருசக்கர வாகனத்தில் வந்து துணிகரமாகச் சங்கிலியைப் பறித்துச் சென்றுள்ளனர். மாவட்ட தலைநகரத்திலேயே இப்படிக் கொள்ளை நடந்திருப்பது பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இது போல் கடந்த சில மாதங்களில் மாவட்டம் முழுவதும் பல திருட்டு, கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன. காவல்துறை இதுபோன்ற கொள்ளை, திருட்டு சம்பவங்களில் அசட்டையாக இருப்பது மக்களை இன்னும் வேதனை அடையச் செய்துள்ளது. உயிருக்கும், உடமைக்கும் பயந்து, பயந்தே வாழ்கின்றனர் திருப்பத்தூர் மாவட்ட மக்கள் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

சார்ந்த செய்திகள்