
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகிலுள்ள அனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த தணிகைவேல் என்பவர், அப்பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர், அப்பகுதியில் வீடு கட்டுவதற்காக தனது சகோதரர் நாகராஜ் என்பவரிடம் ஐந்து லட்ச ரூபாய் பணம் கடனாக வாங்கி அந்தப் பணத்தை வீட்டில் உள்ள பீரோவில் வைத்துப் பூட்டி இருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு பீரோ இருந்த அறையில் சத்தமில்லாமல் புகுந்த கொள்ளையர்கள், பீரோவைத் திறந்து அதிலிருந்து ஐந்து பவுன் நகை, நாலரை லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து தணிகைவேல் கொடுத்த புகாரின் அடிப்படையில் அனந்தபுரம் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.
அதேபோல், கண்டமங்கலம் அருகே உள்ள பள்ளி புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 1ஆம் தேதி தான் இவருக்கு திருமணம் நடந்துள்ளது. அதன் காரணமாக வில்லியனூரில் உள்ள மாமியார் வீட்டிற்கு விருந்துக்கு சென்றிருந்தார். அதை பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள், அவரது வீட்டுக்குள் புகுந்து பீரோவை உடைத்து அதிலிருந்த பணம் 40 ஆயிரம், 250 கிராம் வெள்ளி பொருட்கள், ஒரு பவுன் தங்க நகை ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளனர்.
திண்டிவனம், ரோஷினி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த விவசாயியான கோதண்டபாணி என்பவரின் மனைவி ராஜேஸ்வரி, நேற்று முன்தினம் காலை வீட்டுக்கு பின்புறம் சென்றுள்ளார். அங்கு மறைந்திருந்த மர்ம நபர், ராஜேஸ்வரியின் கழுத்தில் இருந்த 10 பவுன் தாலி சரடை அறுத்துள்ளார்.
இதே பகுதியில் உள்ள லட்சுமணன் என்பவரின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் பீரோவைத் திறந்து அதில் இருந்து 3 வெள்ளி கொலுசுகள் தங்க மோதிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேற்படி கொள்ளை சம்பவங்கள் அனைத்தும் ஒரே நாளில் நடந்துள்ளன. இப்படி தொடர் கொள்ளையர்களால் விழுப்புரம் மாவட்ட மக்கள் அச்சத்தில் உள்ளனர்.