
திருச்சி மாநகரத்தில், கடந்த ஜனவரி மாதம் 13ஆம் தேதி, கண்டோன்மெண்ட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியல் நடந்து சென்ற நபரிடம் சுமார் 8.42 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்தது தொடர்பாகவும், கடந்த பிப்ரவரி மாதம் 07ஆம் தேதி அமர்வு நீதிமன்ற காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த சென்ற நபரிடம் 5 பவுன் தங்கநகையை கொள்ளையடித்தது தொடர்பாகவும், மார்ச் மாதம் 6ஆம் தேதி அமர்வு நீதிமன்ற காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்து சென்ற மற்றொரு நபரிடம் 1.42 பவுன் நகைகள் கொள்ளையடித்தது தொடர்பாகவும், அதே மார்ச் மாதம் 10ஆம் தேதி உறையூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குழுமாயி அம்மன் திருவிழாவின் போது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து தொடர்பாகவும் சம்பந்தபட்டவர்கள் கொடுத்த புகாரின்பேரில் சம்பந்தப்பட்ட காவல் நிலைங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள் தொடர்பாக திருச்சி மாநகரக் காவல் ஆணையர் உத்தரவின்பேரில், காவல் துணை ஆணையர் (வடக்கு) அறிவுரையின்பேரில், காவல் உதவி ஆணையர் கண்டோன்மெண்ட் சரகம், அமர்வு நீதிமன்றம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தத் தனிப்படை காவல்துறையினர், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில், இது தொடர்பாக பவித்ரன்(24), வெங்கடேசன்(57) ஆகியோரைக் கைது செய்து அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வந்தனர். அதில், திருச்சி மாநகர் பகுதியில் மேற்கண்ட கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதை இருவரும் ஒப்புக்கொண்டனர். மேலும், அவர்களிடமிருந்து மேற்படி வழக்குகளில் கொள்ளையடித்த சுமார் 8 லட்சம் மதிப்புள்ள 19 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன. மேலும் விசாரணைக்குப் பின் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.