Robbers arrested at mill owner's house

தூத்துக்குடி மாவட்டம் புது அப்பனேரி கிராமத்தில் மில் அதிபர் 67 வயதான நல்ல சிவன் என்பவர் வீட்டில் ஜூன் 1ம் தேதி இரவு முகமூடி கொள்ளை கும்பல் வீட்டின் கதவில் இருந்த லாக்கை உடைத்து பீரோவில் இருந்த 20 சவரன் தங்க நகைகளையும், வெள்ளி பொருட்களையும் பணத்தையும் கொள்ளையடித்து சென்றது. இது தொடர்பாக மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன், எஸ்.ஐ.க்கள் செந்தில்குமார், ராமச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இதையடுத்து, அப்பகுதியில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்ததில் முக கவசம் அணிந்த இருவர் கொள்ளை சம்பவம் நடந்த வீடு அமைந்துள்ள தெருவில் பைக்கில் இரண்டு முறை கடந்து சென்றிருப்பது தெரிய வந்தது. முக கவசத்தின் கலரை வைத்து சுற்றுவட்டார பகுதிகளில் சிசிடிவி காட்சிகளை பார்த்த போது ஒரு இடத்தில் முக கவசத்தை கழட்டி மாற்றிய போது முகத்தை அடையாளம் கண்டு துப்பு துலக்கினர். இதில் அந்த நபர் காஞ்சிபுரம் மாவட்டம் அகரம்தென் நேசமணி தெருவை சேர்ந்த பிரபல கொள்ளையன் 48 வயதான மோகன் சகாயராஜ் என்பதும், சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்தது.

Advertisment

Robbers arrested at mill owner's house

இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் சென்னை பள்ளிக்கரணை கக்கன்ஜீ தெருவை சேர்ந்த 37 வயதான சதீஷ், அம்பத்தூர் பானு நகரை சேர்ந்த 53 வயதான பொன் முருகன், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் காமராஜ் நகரை சேர்ந்த 43 வயதான முத்து ராஜா ஆகிய நான்கு பேரும் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது அம்பலமானது.

பிடிபட்டவர்களிடம் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், சாத்தூர் காமராஜ் நகர் முத்து ராஜா, கஞ்சா வழக்கு ஒன்றில் கைதாகி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அங்கு ஏற்கனவே சிறையில் இருந்த மோகன் சகாயராஜ், சதீஷ், பொன் முருகன் ஆகியோருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த நான்கு பேரும் கூட்டணி அமைத்து தென் மாவட்டங்களில் கைவரிசை காட்டுவது என முடிவெடுத்துள்ளனர்.

Advertisment

அதன்படி சாத்தூரை சேர்ந்த முத்துராஜா மூலமாக ராஜபாளையம், கோவில்பட்டி, தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட ஊர்களில் புறநகர் பகுதிகளில் தனியாக இருக்கும் வீடுகளை தேர்ந்தெடுத்துள்ளனர். அப்படி நோட்டமிட்டதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி - ராஜபாளையம் நெடுஞ்சாலையில் புது அப்பனேரி பகுதியில் உள்ள மில் அதிபர் நல்லசிவன் வீடு பூட்டி கிடந்ததை நோட்டமிட்டு ஜூன் 1ஆம் தேதி இரவு அங்கு சென்ற கொள்ளை கும்பல் எலக்ட்ரிக் கட்டர்களை பயன்படுத்தி கதவின் லாக்கை உடைத்து 20 சவரன் தங்க நகை, 1/2 கிலோ வெள்ளி, மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு எஸ்கேப் ஆகியிருப்பது விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை நகை பட்டறைகளில் 10 லட்சத்துக்கு விற்று பணமாக்கி உள்ளனர். நகை பட்டறை ஆட்கள் அந்த நகையை உருக்கி தங்க கட்டியாக மாற்றி உள்ளனர். நகை பட்டறையில் இருந்து 17 சவரன் தங்க கட்டிகளையும், 1/2 கிலோ வெள்ளியையும் போலீசார் மீட்டு நான்கு பேரையும் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

கைதாகி உள்ள மோகன் சகாயராஜ், சதீஷ், பொன் முருகன் ஆகிய மூன்று பேருக்கும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் 40-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் - எஸ்.மூர்த்தி