ADVERTISEMENT

வயதான முதியோர்களிடம் கொள்ளையர்கள் கைவரிசை...

02:50 PM Nov 13, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள எலவடி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் 70 வயது முதியவர் சின்னு இவரது மனைவி மல்லிகா வயது 60. இவர்களுக்கு 2 மகன் மூன்று மகள்கள் என ஐந்து பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகி அவரவர் தனித்தனியாக வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் சின்னுவும் அவரது மனைவி மல்லிகாவும் தங்களது பூர்வீகமான வீட்டில் தனியே வசித்து வந்துள்ளனர்.


நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் இருவரும் உணவை முடித்துக் கொண்டு படுத்து தூங்கி உள்ளனர். மறதி காரணமாக வீட்டின் பின்பக்க கதவை தாழ்ப்பாள் போடாமல் தூங்கி உள்ளதாக தெரிகிறது. இதைப் பயன்படுத்திக்கொண்ட கொள்ளையர்கள் நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவு வழியே வீட்டுக்குள் புகுந்து, பீரோவில் இருந்த 1 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

கொள்ளையர்களின் சத்தம் கேட்டு கணவன், மனைவி இருவரும் எழுந்தனர். அப்போது இருவரையும் கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டியதோடு மல்லிகா கழுத்திலிருந்த 6 பவுன் தாலிக்கொடி, 3 பவுன் தங்கச் செயின் ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். பின்னர் கணவன், மனைவி இருவரும் சத்தம் போட்டு கத்தி உள்ளனர்.

இவர்கள் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். அதற்குள் கொள்ளையர்கள் தலைமறைவாகிவிட்டனர். இதையடுத்து சின்னசேலம் காவல் நிலைத்தில் சின்னு அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த இன்ஸ்பெக்டர் ராஜா, தனிப்பிரிவு ஏட்டு பாலசுப்பிரமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை செய்துள்ளனர்.


இதனையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ், முருகன், மனோகரன், தங்கத்துரை உள்ளிட்ட போலீசாரும் அப்பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை செய்துள்ளனர். மேலும் கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. கொள்ளை போன பணம் நகையின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் என்று கூறுகின்றனர். ஊருக்கு நடுவே வீடுகள் நெருக்கமாக உள்ள பகுதியில் உள்ள ஒருவீட்டில் புகுந்து கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பையும் பயத்தையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT