Advertisment

ஐந்துக்கும் மேற்பட்ட மாவட்ட டாஸ்மாக் ஊழியர்களை கதிகலங்க வைத்த கொள்ளையர்கள் கைது... 

Robberies of More than five district Tasmac was arrest

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் நைனார்பாளையம் சாலையில் உள்ள ரயில்வே கேட் அருகில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் கடந்த மாதம் 31ஆம் தேதி அங்கு விற்பனையாளராக பணி செய்துவரும் சுப்பிரமணியன், செல்வம், கன்னிசாமி ஆகியோர் பணி முடிந்து அன்றைய விற்பனை செய்த பணம் ரூ.2 லட்சத்து 27 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்தனர். அப்போது அங்கு பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள் அரிவாளால் சுப்பிரமணியனை தலையில் வெட்டிவிட்டு அவர் வைத்திருந்த பணத்தை பறித்து சென்றனர். இதேபோன்று திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் டாஸ்மாக் கடை விற்பனையாளர்களிடம் ரூ.3 லட்சம் கொள்ளை அடித்துள்ளனர். கடந்த 20ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் வெப்படை டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் இரண்டு லட்சம் ரூபாயை கொள்ளை அடித்துள்ளனர். தொடர்ந்து ஆகஸ்ட் 8ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் ரூ.4 லட்சம், கடந்த 13ம் தேதி மதுரை மாவட்டம் சிலைமான் டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் ரூ.3 லட்சம் 22ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் வேலகௌண்டன்பட்டி டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் மூன்றரை லட்சம், 24ஆம் தேதி கரூர் மாவட்டம் வெள்ளியணை டாஸ்மாக் கடையில் ரூ.15,000, 27ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆசனூர் டாஸ்மாக் ஊழியர்களிடம் இரண்டரை லட்சம் ரூபாய் கொள்ளை, 5ஆம் தேதி பெரம்பலூர் மாவட்டம் பரவாய் டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் ரூ.70,000 கொள்ளை, ஏழாம் தேதி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் டாஸ்மாக் கடையில் ஒரு லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் கொள்ளை.

இப்படி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலூர், நாமக்கல், கரூர், மதுரை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடை ஊழியர்களிடமும் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர் பிடிப்பட்ட கொள்ளையர்கள். இப்படி ஐந்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கடந்த 3 மாதங்களில் டாஸ்மாக் ஊழியர்களை குறிவைத்து அவர்களை கத்தியால் வெட்டியும், மிளகாய் பொடிதூவியும், கத்தியை காட்டி மிரட்டியும் தொடர்கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த கொள்ளையர்களை பிடிப்பதற்காக மேற்கண்ட ஐந்து மாவட்ட போலீசாரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி ஜியாவுல் ஹக், தனிப்படை ஒன்றை அமைத்தார். அதில் கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி இராமநாதன் மேற்பார்வையில் சின்னசேலம் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர்கள் திருமால், ஆரோக்கியதாஸ், தலைமை காவலர்கள் முருகன், சுரேஷ், தங்கதுரை, விஜய் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் டாஸ்மாக் கொள்ளையர்களை பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று தீவிரமாக தேடி வந்தனர்.

Advertisment

இந்த நிலையில் நேற்று காலையில் சின்னசேலம் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான தனிப்படை போலீசார் சேலம் கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வி.கூட்ரோடு அருகே ராயப்பனூர் என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டு பேர் பைக்கில் அதி வேகமாக வந்துள்ளனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் பிடிபட்ட இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளனர். அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அவர்களின் விசாரணையில் பிடிபட்ட இருவரும் தஞ்சை மாவட்டம் திருவையாறு தாலுகா நாகத்தி என்ற கிராமத்தைசேர்ந்த பிரதீப் வயது 20, பிரசாந்த் வயது 19 என்பது தெரியவந்துள்ளது. மேலும் சின்னசேலம் டாஸ்மாக் விற்பனையாளர்கள் சுப்பிரமணியன் செல்வம் ஆகியோரைத் தாக்கி ரூ.2 லட்சத்து 27 ஆயிரம் கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டுள்ளனர். இவர்கள் ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஜூலை மாதத்திலிருந்து தற்போது வரை 10 இடங்களில் டாஸ்மாக் ஊழியர்களின் நடமாட்டத்தை கண்காணித்தும் அவர்களை குறிவைத்தும் தொடர்க்கொள்ளை சம்பவத்தை நடத்தியுள்ளனர்.

மொத்தம் 8 மாவட்டங்களில் டாஸ்மாக் விற்பனையாளர்களைத் தாக்கி அவர்கள் மீது மிளகாய் பொடி தூவியும், அரிவாளால் வெட்டியும் பணம் கொள்ளை அடித்ததை ஒப்புக் கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பிடிபட்ட இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 10 ஆயிரத்து 700 ரூபாய் பணம், ஒரு கத்தி ரூ.2 லட்சம் மதிப்புள்ள பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். கொள்ளையர்களை பிடித்தத்தனிப்படை போலீசாருக்கு விழுப்புரம் சரக டி.ஐ.ஜி எழிலரசன், கள்ளக்குறிச்சி எஸ்.பி ஜியாவுல் ஹக் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மேலும் கொள்ளைச் சம்பவங்களில் இவர்களோடு சேர்ந்து ஈடுபட்ட திருவையாறு தாலுகா திருப்பந்துருத்தி கிராமத்தைசேர்ந்த ராஜகணபதி, சதாம் உசேன், நரி என்கிற அரவிந்த், சம்பத் ஆகியோருக்கும் தொடர்பிருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களில் சம்பத் கடந்த வாரம் போலீசாரிடம் சிக்கியுள்ளார். அவருக்கு வலிப்பு ஏற்பட்டு ஒரு கை செயலிழந்த நிலையில் அவருக்கு கரோனா நோய்த்தொற்றும் ஏற்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பிடிபட்ட கொள்ளையர்களிடம் விசாரணை செய்வதற்காக விழுப்புரம், திருச்சி, பெரம்பலூர், நாமக்கல், கரூர், மதுரை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் சின்னசேலம் காவல் நிலையம் வந்துள்ளனர். இவர்கள் தங்கள் பகுதியில் நடந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக பிடிபட்ட இருவரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் இந்த இரு கொள்ளையர்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்து பிறகு நீதிமன்ற உத்தரவு பெற்று போலீஸ் கஸ்டடி எடுத்து மீண்டும் தீவிர விசாரணை செய்வதற்கு தயாராகி வருகின்றனர் போலீசார்.

arrest police TASMAC Theft
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe