திருச்சி ஜங்சன் ரயில் நிலைய பெஞ்சில் கடந்த 2ம் தேதி ஒருவர் படுத்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஆல்வின்குமார் என்பவர் அவரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ. 2 ஆயிரம் கொள்ளை அடித்துள்ளார். இந்த வழக்கில் ஆல்வின்குமார் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில், ஆல்வின்குமார் மீது திருச்சி ரெயில்வே காவல்நிலையத்தில் ரெயில் பயணிகளிடம் செல்போன் மற்றும் லேப்டாப் திருடிய 2 வழக்கும், சென்னை எழும்பூர் ரெயில்வே காவல்நிலையத்தில் ரெயில் பயணிகளிடம் செல்போன் மற்றும் லேப்டாப் திருடிய 4 வழக்குகள் உட்பட மொத்தம் 6 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து ஆல்வின்குமார் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதை தடுக்கும் விதமாக திருச்சி ரெயில்வே காவல் ஆய்வாளர் திருச்சி மாநகர ஆணையர் கார்த்திகேயனுக்கு அறிக்கை ஒன்றைக் கொடுத்தார். அதனை பரிசீலனை செய்த ஆணையர் கார்த்திகேயன், ஆல்வின்குமாரை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருக்கும் ஆல்வின்குமாருக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.