loan

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு அடையாள அட்டைகள் பெற்றுள்ள சாலையோர வியாபாரிகள், தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் வகையில் 10 ஆயிரம் ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

Advertisment

கடன் தொகை பெற விரும்புவோர், ஜூலை 20ம் தேதி (திங்கள்கிழமை) முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள், ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும், பதிவு செய்யப்பட்ட வியாபாரிகளுக்கு வியாபாரச் சான்றிதழ் வழங்கவும் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் 3 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

Advertisment

ஏற்கனவே சேலம் மாநகராட்சி நிர்வாகத்தால் 2883 சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

கரோனா ஊரடங்கு காலத்தில் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதார பாதிப்புகளை தவிர்க்கும் வகையில், தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் அவர்களுக்கு தலா 1000 ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இதுவரை உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்த 2198 பேருக்கு அவரவர்களின் வங்கி கணக்கில் தலா 1000 ரூபாய் வீதம் 21.98 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டு உள்ளது.

Advertisment

இந்நிலையில், மத்திய அரசின் சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பதிவு பெற்றுள்ள சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் 10 ஆயிரம் ரூபாய் கடனுதவியும், அவர்களுக்கு வியாபார சான்றிதழ் வழங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

சேலம் மாநகர பகுதிகளில் இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற விரும்பும் நபர்கள், www.pmsvanidhi.mohua.gov.in என்ற இணையதளத்தில் தங்களின் விண்ணப்பம், ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இதற்காக சூரமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்ட சாலையோர வியாபாரிகள் சூரமங்கலம் மண்டல அலுவலக வளாகம், அஸ்தம்பட்டி மற்றும் அம்மாபேட்டை மண்டலங்களுக்கு உட்பட்ட வியாபாரிகள் மாநகராட்சி ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள பழைய அலுவலக கட்டடம், கொண்டலாம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட சாலையோர வியாபாரிகள் கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகம் ஆகிய மூன்று இடங்களில் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

கடன் பெற விரும்பும் சாலையோர வியாபாரிகள் ஜூலை 20ம் தேதி முதல் மேற்சொன்ன சிறப்பு மையங்களில், தங்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண், ஆதார் அட்டை - 2 நகல்கள், வங்கி கணக்கு புத்தகம் - 2 நகல்கள், பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம் - 1, தபால் கார்டு அளவுடைய குடும்ப புகைப்படம் - 1, குடும்ப அட்டை - 2 நகல்கள் ஆகிய ஆவணங்களுடன் சென்று, வங்கிக் கடனுதவியும், வியாபாரச் சான்றிதழும் பெறலாம். இவ்வாறு சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் தெரிவித்துள்ளார்.