
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் நேற்று (27/01/2021) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு சங்கத்தின் ஈரோடு மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். கோபி வட்டத் தலைவர் தர்மலிங்கம், திருப்பூர் வட்டத் தலைவர் பிரான்சிஸ் அமல்ராஜ், நீலகிரி மாவட்டம் விஜயகுமார், கரூர் மாவட்டம் ஜெகநாதன், சரவணன், குமார், அன்புச்செல்வன், பாலமுருகன், ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
'41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்; அரசு பணியிடங்களை ஒழித்திட வகை செய்யும் பணியாளர் சீரமைப்புக் குழுவைக் கலைக்க வேண்டும். அரசாணை 56- ஐ ரத்து செய்ய வேண்டும்; உயிரிழந்த 200- க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும்; 5,000- க்கும் மேற்பட்ட சாலை பணியாளர் காலியிடங்களை நிரப்பி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்; சாலை பராமரிப்பு பணிகளைத் தனியாருக்கு கொடுப்பதை கைவிட வேண்டும்.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; தமிழக விவசாயிகள் மீனவர்கள் வியாபாரிகள் அமைப்புசாரா தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான சிறப்புத் திட்டங்களை அறிவிக்க வேண்டும்' உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதைத் தொடர்ந்து சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மட்டும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவனை சந்தித்து தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுத்தனர்.