Road development tender notice of Rs 2650 crore worth of panchayat councils canceled! - High Court takes action!

Advertisment

தமிழகம் முழுவதும் ரூ.2,650 கோடி மதிப்பிலான ஊராட்சி மன்றங்களின் சாலை மேம்பாட்டு டெண்டர்களை, ஊராட்சி மன்றங்களின் அனுமதி இல்லாமல் வெளியிட்ட அறிவிப்பாணையை, சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் 14-வது நிதிக் குழு பரிந்துரையின் பேரில்,ஒவ்வொரு மாநிலத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்த நிதி ஒவ்வொரு ஊராட்சிக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது. ஊராட்சி மன்றத்தின் மூலமாக,ஊராட்சியில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான திட்டங்களை நிறைவேற்ற,ஊராட்சிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஊராட்சி மன்ற தீர்மானங்கள் இல்லாமலேயே, தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் மூலமாக தன்னிச்சையாகத் திட்டங்களை தேர்ந்தெடுக்கின்றனர்.

ஊராட்சி மன்ற ஒப்புதல் இல்லாமலும், கிராம சபையின் ஒப்புதல் இல்லாமலும், அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக, தமிழக அரசு அதிகாரிகள் மூலமாகவே திட்டங்களைத் தேர்ந்தெடுத்துச் செயல்படுத்த உள்ளதாகவும், இதனை ரத்து செய்ய வேண்டும் என்றும், திருவாரூர் மாவட்டம் - மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஜோதிமணி குமரேசன் உள்ளிட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

Advertisment

இந்த வழக்கு விசாரணை, நீதியரசர் ஆனந்த வெங்கடேஷ் முன்பு நடைபெற்றது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் பி.வில்சன், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள். ஊராட்சி மன்றங்கள் முடிவெடுத்து, அதனடிப்படையில் டெண்டர் விட வேண்டும் என்று வாதிட்டனர். இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஊராட்சி மன்றங்களின் அனுமதி இல்லாமல், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் மூலமாகவே டெண்டர் வெளியிடுவதற்கான அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.