ADVERTISEMENT

“பெற்றோர்களிடம் இந்த மனப்போக்கு மாற வேண்டும்” - ஆளுநர் ரவி

12:24 PM Feb 12, 2024 | ArunPrakash

திருச்சி தேசிய கல்லுாரியில் விளையாட்டு வீரர்களின் 5 நாள் ஐ.சி.ஆர்.எஸ் கருத்தரங்கின் நிறைவு விழா நேற்று நடந்தது. கல்லுாரி செயலாளர் ரகுநாதன் தலைமையில் நடந்த கருத்தரங்கின் நிறைவு விழாவில் ஆளுநர் ரவி பேசியதாவது, “விளையாட்டு வீரர்கள் போட்டிகளில் வெற்றி பெற்றாலும், தோல்வியுற்றாலும் அவர்கள் இந்த நாட்டின் சொத்துகள். 2008ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் அபினவ் பிந்த்ரா மட்டும் ஒரு தங்கப்பதக்கம் வென்ற போது ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், ஒரு பதக்கம் மட்டும் வென்றது சற்று மன வருத்தத்தைத் தந்தது.

ADVERTISEMENT

2010ம் ஆண்டு டில்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடந்தது. டில்லி விளையாட்டு கிராமத்தில் நடந்த விருந்தில் விஐபிக்கள் வரவில்லை என்பதற்காக வீரர்கள் சாப்பிடுவதற்கு 45 நிமிடங்கள் காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டது. இதுபோல வீரர்களை நடத்தக் கூடாது. பதக்கம் வென்றவர்களுக்கு அரசுகள் கோடிக்கணக்கில் பரிசு கொடுப்பதை போல விளையாட்டு உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும். பிரதமர் மோடி அறிவித்த பிட் இந்தியா திட்டத்தின் படி பல்வேறு விளையாட்டு மேம்பாட்டு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

ADVERTISEMENT

சமீபத்தில் நடந்த சர்வதேச போட்டிகளில் இந்திய வீரர்கள் பதக்கம் குவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தங்கள் குழந்தைகள் விளையாடினால் அதிக மதிப்பெண் பெற முடியாது என நினைத்து பெற்றோர்கள் விளையாட்டில் ஈடுபட அனுமதிக்காதது தவறாகும். பெற்றோர்களிடம் இந்த மனப்போக்கு மாற வேண்டும். விளையாட்டில் ஈடுபடுவதால் உடல், மன வலிமை, தலைமை பண்பு, கூட்டு முயற்சி போன்ற திறமைகள் உருவாகும். இந்த விளையாட்டு கருத்தரங்கில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து அதிக அளவில் வீரர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டது சிறப்பாகும். வீரர்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டு மருத்துவர்கள், பயோ மெக்கானிக் அனைவர்களும் இணைந்து செயல்பட்டால்தான் விளையாட்டில் சிறப்பு நிலைமை அடைய முடியும். ஓட்டப்பந்தயத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மைக்ரோ வினாடியில் போட்டியில் முடிவைக் கணிக்க முடிகிறது. நுாற்றாண்டு பாரம்பரிய பெருமை கொண்ட தேசியக் கல்லுாரிகளில் இது போன்ற விளையாட்டு கருத்தரங்கை அதிக அளவில் நடத்த வேண்டும்” என்றார்.

இந்தக் கருத்தரங்கில் 50 நாடுகளைச் சேர்ந்த சிறந்த விளையாட்டு வீரர்கள், வல்லுநர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். கருத்தரங்கில் ஆயுர்வேதம், போட்டிகளில் ஏற்படும் காயங்களுக்கான சிகிச்சை, உணவு மேலாண்மை, உடற்பயிற்சி, யோகா,மருத்துவம், விளையாட்டு கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள், குறும்பட போட்டி நடந்தது. நிகழ்ச்சியில் ஒலிம்பியன் பாஸ்கரன், எக்ஸல் நிறுவன சேர்மன் முருகானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர். துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி கருத்தரங்கம் குறித்த அறிக்கை மற்றும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வாசித்தார். முன்னதாக கல்லுாரி முதல்வர் குமார் வரவேற்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT