rk nagar by election

Advertisment

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது வாக்காளர்களுக்கு 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்யப்பட்டிருந்ததாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு ரத்து செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு சார்பில் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.கே.நகரில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் நடத்தப்போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதில் டிடிவி தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட அமைச்சர்கள் பிரச்சாரம் செய்தனர். அப்போது ஆளும் தரப்பில் பணப்பட்டுவாடா நடந்ததாக புகார் எழுந்ததையடுத்து வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் சோதனை நடந்தது. ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது.

high court

Advertisment

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வைரக்கண்ணு என்பவர் வழக்கு தொடர்ந்தார். திமுக சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது. வைரக்கண்ணு தொடர்ந்த வழக்கில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தாங்கள் கேட்டதாகவும், அதற்கு தேர்தல் ஆணையம் தமிழக முதல் அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய அபிராமபுரம் காவல்நிலையத்திற்கு பரிந்துரை செய்தாகவும் பதில் அளித்திருந்தது. அதன் அடிப்படையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று மனு செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த 2017ஆம் ஆண்டு அபிராமபுரம் காவல்நிலையத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் கொடுக்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கை இணை ஆணையர் தலைமையில் விசாரிக்க உத்தரவிட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினார். வைரக்கண்ணு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தேர்தல் ஆணையம் புகார் அளித்தும் காவல்நிலையத்தில் இருந்து இதுவரை எந்த அறிக்கையும் சமர்பிக்கவில்லை என்று வாதிட்டனர்.

Advertisment

அப்போது தமிழக அரசு இந்த வழக்கு தொடர்பாக என்ன சொல்கிறது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, இந்த வழக்கு ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுவிட்டது. 2018 பிப்ரவரி மாதம் இந்த வழக்கை ரத்து செய்து தனி நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார் என்று தமிழக அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இதையடுத்து வழக்கை விசாரித்த இரண்டு நிதிபதிகளும் அதிர்ச்சியடைந்தனர். இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த வழக்கு விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.