river childrens incident chief minister announcement funds

கெடிலம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 5 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக, முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கீழ் அருங்குணம் கிராமத்தில் உள்ள கெடிலம் ஆற்றங்கரையில் இன்று (05/06/2022) மதியம் 12.45 மணியளவில் குளிக்கச் சென்ற சங்கவி (வயது 18), பிரியா (வயது 19), மோனிஷா (வயது 16), நவநீதம் (வயது 20), சுமிதா (வயது 18), காவியா (எ) திவ்யதர்ஷிணி (வயது 10), பிரியதர்ஷிணி (வயது 15) ஆகிய 7 பேர் குளிக்கும் இடத்தில் அதிக அளவில் பள்ளம் இருந்ததால், அந்தப் பள்ளப் பகுதியில் உள்ள ஆற்று மணலில் சிக்கி எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

Advertisment

உயிரிழந்தோரில் ஐந்து பேர் குச்சிப்பாளையம் கிராமத்தையும், இருவர் அயன் குறிஞ்சிப்பாடி கிராமத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த துயர சம்பவத்தைக் கேள்வியுற்று மிகவும் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து உடனடியாக தலா ரூபாய் 5 லட்சம் நிவாரண நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.