Skip to main content

தூய்மைப் பணியாளர்களுக்கு இடர் படி; தமிழக அரசு பதில் மனுத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு..!

Published on 27/07/2021 | Edited on 27/07/2021

 

Risk to cleaning staff; High Court orders Tamil Nadu government to file reply petition ..!

 

தூய்மைப் பணியாளர்களுக்கு இடர் படி வழங்குவது குறித்த நிலைப்பாட்டை விளக்கி பதில் மனுத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

தூய்மைப் பணியாளர்களுக்கு இடர் படிகள் வழங்க உத்தரவிடக் கோரி தோழர் சட்ட மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பன்னீர்செல்வம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், தூய்மை தொழிலாளர்கள் கழிவுநீர் தொட்டிகளில்  இறங்கி தூய்மை செய்யும் போது  மரணம் அடைய வாய்ப்பு உள்ளது. அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்கப்படுவதில்லை எனப் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இது சம்பந்தமான மனுவைப் பரிசீலித்த மத்திய அரசு,  கோரிக்கையைப் பரிசீலிக்கவும், தேவையான பாதுகாப்பு வசதிகளை வழங்கவும் தமிழக நகராட்சி நிர்வாகம் ஆணையருக்குப் பரிந்துரைத்ததாகவும், ஆனால் அதன் மீது தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

 

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, "ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள், நிரந்தர பணியாளர்களைப் போல தங்களுக்கும் இடர் படி வழங்கக் கோருவதாகவும், ஒப்பந்த பணியாளர்கள் இடர் படி கோர உரிமையில்லை எனவும், உரியப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

ஆனால், தூய்மைப் பணியாளர்களின் பணியில் எந்த இடர்பாடும் இல்லை எனக் கோவை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

 

இதையடுத்து, இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டை பதில் மனுவாகத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்