
ஒமிக்ரான் உள்ள நிலையில், கல்லூரித் தேர்வுகளை ரத்து செய்திருக்கிறது தமிழக அரசின் உயர்கல்வித் துறை. . அதேபோல் ஜனவரி 31 வரை கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுபோலவே, பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கும் ஜனவரி 31 வரை விடுமுறை என்று அறிவித்திருக்கிறது பள்ளிக்கல்வித்துறை. அதே நேரம் பொதுத் தேர்வை சந்திக்க இருக்கும் 10,11, 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் உண்டு என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
”கல்லூரி மாணவர்களுக்கே விடுப்பு விடும்போது, இந்த 10, 11, 12 படிக்கும் மணவர்கள் தினமும் பள்ளிக்கு வந்துதான் ஆகவேண்டும் என்பது எந்த வகையில் சரி?” என்கிறார்கள் பெற்றோர்கள். தங்கள் பிள்ளைகளுக்கு ஏதேனும் தொற்று ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்து என்றும் கேட்கிறார்கள். அதேபோல் இந்த மாணவர்களுக்கு வகுப்பு இருப்பதால், அனைத்து பள்ளி ஆசிரியர்களையும் அந்தந்த பள்ளியும் வரச் சொல்கிறதாம். அதனால் அவர்களும் பயத்தோடுதான் பள்ளிகளுக்கு வந்துகொண்டிருக்கிறார்கள்.
“மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடக்கும் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டங்களையே ரத்து செய்யும் அரசு, பள்ளி ஆசிரியர்களை தினமும் பள்ளிக்கு வரச்சொல்வதோடு, இந்த நிலையிலும் கற்றல் பயிற்சி குறித்த கூட்டங்களை மாவட்டம் தோறும் நடத்தி வருகிறது. மேலும் ஆசிரியர்களை பிளாக் வாரியாகச் சென்று, ஏனைய ஆசிரியர்களைக் கூட்டி, திறன் வலுவூட்டல் பயிற்சி வகுப்புகளை எடுக்குமாறும் உத்தரவிட்டிருக்கிறது. ஏற்கனவே ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்டது போலவே இம்முறையும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம் என விரும்புகிறார்கள் ஆசிரியர்கள்.