Skip to main content

மாணவர்கள் சேர்க்கையை மறுக்கும் தனியார்ப் பள்ளிகள்; அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Published on 05/05/2023 | Edited on 05/05/2023

 

right to free and compulsory education act related case madras high court

 

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த முத்து என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு ஒன்றில், "கடந்த 2009ம் ஆண்டு இயற்றப்பட்ட கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி, அனைத்து தனியார்ப் பள்ளிகளும் மாணவர் சேர்க்கையில் உள்ள மொத்த இடங்களில்  25 சதவீத இடங்களில் பின்தங்கிய குழந்தைகளுக்கு மாணவர் சேர்க்கை வழங்க வேண்டும். இந்த சட்டத்தில் குறிப்பிட்ட தனியார்ப் பள்ளிக்கு ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அப்பால் வசிப்பதாக கூறி பல குழந்தைகளின் விண்ணப்பங்களைத் தனியார்ப் பள்ளிகள் நிராகரிக்கின்றன. ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அப்பால் வசிக்கும் குழந்தைகள், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் இயலாத நிலையே இருந்து வருகிறது" என்று மனுவில் கோரியிருந்தார்.

 

இந்த வழக்கானது நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா மற்றும் சி. சரவணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடுகையில், "ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் குழந்தைகள் யாரும் விண்ணப்பிக்கவில்லை என்றால் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அப்பால் வசிக்கும் குழந்தைகளுக்கு மாணவர் சேர்க்கை வழங்க வலியுறுத்தி கடந்த  2017 இல் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டது. இருப்பினும் அதனடிப்படையில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் குழந்தைகள் எவரும் விண்ணப்பிக்காவிட்டாலும், அருகில் உள்ள பகுதி குழந்தைகளுக்கு மாணவர் சேர்க்கை வழங்கப்படுவதில்லை. எனவே, ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அப்பால் வசிக்கும் குழந்தைகளும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறினர்.

 

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில்  "கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் ஏதேனும் விதிமீறல் இருந்தால் அதிகாரிகளுக்கு புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார் . இதனை கேட்டறிந்த  நீதிபதிகள் இந்த மனுவுக்கு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு  விசாரணையை மே மூன்றாவது வாரத்தில் ஒத்தி வைத்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இளையராஜா அமைதியானவர், அடக்கமானவர்” - நீதிமன்றத்தில் வாதம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ilaiyaraaja copy write issue case update

இளையராஜாவின் 4500 பாடல்களை பயன்படுத்துவதற்காக எக்கோ, அகி உள்ளிட்ட நிறுவனங்கள் அவரிடம் ஒப்பந்தம் செய்திருந்தார்கள். ஆனால் 2014ஆம் ஆண்டு, ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை இல்லாமல் தனது பாடல்களை பயன்படுத்தியதாக எக்கோ, அகி மியூசிக் உள்ளிட்ட சில நிறுவனங்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2019ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதில் தயாரிப்பாளரிடம் உரிமை பெற்று இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளதென்றும், இளையராஜாவுக்கும் இந்தப் பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இருக்கிறதென்றும் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 

இந்த மேல்முறையீட்டு மனு இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அவர்கள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் மீது இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். இதையடுத்து பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து எக்கோ நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மேலும் பாடல்களின் காப்புரிமையை தயாரிப்பாளரிடமிருந்து பெற்றுள்ளோம் என்றும் அதனடிப்படையில் இந்த பாடல்களை பயன்படுத்த எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். 

இந்த மனு கடந்த மாதம் நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் சக்திவேல் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி சுப்பிரமணியன் அறிவித்தார். மேலும் இந்த வழக்கை வேறு அமர்வில் பட்டியலிடும் வகையில் வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தும் உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பிற்கும் இளையராஜா தரப்பிற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.  

இளையராஜா தன்னை எல்லாருக்கும் மேலானவர் என நினைக்கிறார் என மனுதாரர் தரப்பு வாதிட்டது. அதற்கு பதிலளித்த இளையராஜா தரப்பு ஆமாம், இளையராஜா எல்லோருக்கும் மேலானவர்தான். வீம்புக்காக இதனை சொல்வதாக நினைக்க வேண்டாம் என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது. 

அதன்படி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம், இசை மும்மூர்த்திகளான முத்துசுவாமி தீக்ஷிதார், தியாகராஜர் மற்றும் சியாமா சாஸ்திரி தான் எல்லோருக்கும் மேலானவர்கள் என்று கூறலாம் என்றும், ஆனால் இசையமைப்பாளர் இளையராஜா விஷயத்தில் அத்தகைய கூற்றை கூற முடியாது எனவும் கருத்து தெரிவித்தது. இதையடுத்து வாதிட்ட இளையராஜா தரப்பு வழக்கறிஞர், “தொடர்ந்து வாதங்களை முன்வைக்க விசாரணை வரும் 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.காப்புரிமை விவகாரத்தில் பிறரைவிட எங்கள் தரப்பின் (இளையராஜாவின்) உரிமைதான் மேலானது என்ற வகையில் கருத்து தெரிவிக்கப்பட்டது. மற்றபடி இளையாராஜா அமைதியானவர், அடக்கமானவர். நீதிமன்றத்தையும் சட்டத்தையும் மதித்து நடக்கக் கூடியவர்” என தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 24-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. 

Next Story

‘கோவை ரைசிங்’ - திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Coimbatore Rising DMK election report release

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் கோவை மக்களவைத் தொகுதிக்கான திமுக தேர்தல் அறிக்கையை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் வெளியிட்டனர். இந்த தேர்தல் அறிக்கையில், “கோவை மாவட்டத்தில் பன்னோக்கு சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும். கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் விரைந்து மேற்கொள்ளப்படும். சென்னை, கோவை, தூத்துக்குடி இடையே பிரத்யேக சரக்கு வழித்தடம் அமைக்கப்படும். மேட்டுப்பாளையம் - சத்தியமங்கலம் - கோபிசெட்டிபாளையம் - ஈரோடு இடையே அகல ரயில் பாதை திட்டம் நிறைவேற்றப்படும். ரயில் பராமரிப்பு வசதிகள் கோவையில் உருவாக்கப்படும்.

கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் விரைந்து முடிக்கப்படும். கோவையில் நகர போக்குவரத்து ஆணையம் அமைக்கப்படும். கோவையில் புதிய தொழில் ஹப் தொடங்கப்படும். கோவையில் உள்ள நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கோவையில் குறு தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு தொழில் பூங்கா அமைக்கப்படும். கோவையில் உள்ள நீர்நிலைகளில் நீர் மாசுவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.