
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் மேட்டுச்சாலையில் அமைச்சர் விஜயபாஸ்கரின் அண்ணன் உதயகுமார் நடத்தும் மதர்தெரசா கல்வி நிறுவனங்களில் உதயகுமாரின் உதவியாளராகப் பணிபுரிந்துவருபவர் வீரபாண்டியன். இவர், பல வருடமாக காசநோய்ப் பிரிவு முதன்மை ஆய்வாளராகவும் பணி புரிந்துவருகிறார். வீரபாண்டியனின் விராலிமலை வீட்டில் இருந்து பணம் கொண்டு செல்லப்படுவதாக வந்த தகவலையடுத்து கடந்த ஒருவாரமாக கண்காணிப்பில் இருந்த திருச்சி மணடல வருமான வரித்துறை துணை ஆணையர் அனுராதா தலைமையிலான குழுவினர், நேற்று மதியம் வீரபாண்டியனின் வீடுகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டார்கள். இந்த தகவல் வெளியான நிலையில் பால்வளத்துறை தலைவர் பழனியாண்டி தலைமையில் அதிமுகவினர் அங்கு குவிந்திருந்தனர். பக்கத்து மாடிகளில் திமுகவினர் நின்று கண்காணித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.
முதல்கட்ட சோதனை நடந்து கொண்டிருந்தபோதே பணத்தாள்கள் கட்டுப்போடும் ரப்பர்பேன்ட்கள் 2 பாக்கெட் உள்ளே போனது. தொடர்ந்து இரவு 10 மணிக்கு 3 பெரிய அட்டைப் பெட்டிகள் (பிஸ்கட் பாக்கெட் வைக்கப்படும் அட்டைப் பெட்டிகள்) கொண்டு சென்றனர். அதன் பிறகு அதிகாரிகள் இரவு உணவை முடித்துக் கொண்டு தொடர்ந்து ஆய்வில் கைப்பற்றப்பட்ட பணம், மற்றும் ஆவணங்களைச் சரிபார்த்து ஒவ்வொன்றாக வீரபாண்டியனிடம் காட்டிவிட்டு அட்டைப் பெட்டியில் அடுக்கி வைத்து சீல் வைத்தனர். தொடர்ந்து கைப்பற்றப்பட்ட பணம், ஆவணங்கள் மற்றும் சில நபர்களின் பெயர்களுடன் இருந்த பேப்பர்களையும் கைப்பற்றி அவற்றை எல்லாம் தயாராகக் கொண்டு வந்திருந்த மடிக்கணினியில் பதிவுசெய்து பிரிண்ட் எடுத்து வீரபாண்டியனிடம் காட்டி சரிபார்த்தனர். பிறகு கையெழுத்து வாங்கிய பேப்பர்களை ஒரு கட்டைப்பை மற்றும் சூட்கேஸ்களில் வைத்துக் கொண்டு அதிகாலை 2 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டனர்.

வெளியே வந்த அதிகாரி அனுராதாவிடம் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு, “நான் மாவட்ட தேர்தல் பார்வையாளர். எது பற்றியும் பேச எனக்கு அனுமதி இல்லை” என்று பதில் கூறிச் சென்றார். விபரம் அறிந்த சிலர் கூறும் போது, ‘அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகள் மட்டுமின்றி திருச்சி, சிவகங்கை மாவட்டத்தி்ல் உள்ள பல தொகுதிகளுக்கும் பணப் பொறுப்பாளர். ஆனால் இவர் தொகுதியில் கடும்போட்டி நிலவுவதால் வெளியில் உள்ள தொகுதிகள் மீது கவனம் செலுத்த முடியவில்லை. இந்த நிலையில்தான், காரைக்குடி தொகுதிக்குப் போக வேண்டிய 'வைட்டமின் ப' போகவில்லை என்று கூட்டணிக் கட்சியினர் தேசியத் தலைமை வரை புகார் கொண்டு போனதால்தான், அமைச்சரை அச்சுறுத்துவதற்கு இந்தச் சோதனை நடத்தப்பட்டது. சரியாகச் செய்ய வேண்டுமானால் பல இடங்களில் சோதனை செய்திருக்க வேண்டும். சில நாட்கள் முன்னால்கூட பல ஆவணங்கள் சிக்கியது. அதுபற்றி கூட எதுவும் விசாரிக்கவில்லை. ஆனால், அந்த பேப்பர்களில் போடப்பட்ட மேப்பில், மையப்பகுதி விராலிமலை வீரபாண்டியனின் வீடு. அங்கிருந்துதான் விராலிமலை ஒன்றியங்களுக்கான பணம் செல்ல வேண்டிய மேப்தான் சிக்கியது. இனிமேல், முதலில் போடப்பட்ட ஒப்பந்தப்படி அனைத்துத் தொகுதிகளுக்கும் பாதுகாப்போடு 'வைட்டமின் ப' அனுப்பி வைக்கப்படும். அதனால் இனி பிரச்சனை இல்லை என்கிறார்கள்.