Revenue Commissioner constructed road single day town that has no roads many years

Advertisment

புதுக்கோட்டை வருவாய்கோட்டாட்சியராக முருகேசன் வந்த பிறகு பாதையில்லாமல் தவித்த மக்களுக்கும் தீர்வுகள் கிடைப்பதை பெருமையாகப் பேசுகிறார்கள்.. நூறாண்டு பாதைப் பிரச்சனைகளுக்கும் ஒரு சில நாட்களில் பாதை அமைத்து புதிய பாதையில் வெற்றிநடை போட வைத்து வருகிறார்.

கந்தர்வக்கோட்டை தொகுதியில் தொடங்கி ஆலங்குடி தொகுதியில் குளமங்கலம், சேந்தன்குடி என பல கிராமங்களில் பல ஆண்டு பாதைப் பிரச்சனையை அசால்ட்டாக தீர்த்து வைத்தவர்,வெள்ளிக்கிழமை கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் கிராமத்தில் பல வருட பிரச்சனையை முடித்து புதிய பாதை அமைத்திருக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் கிராமத்தில் தெற்கு பகுதியில் இனாம், ஜமின் கிராமங்களின் எல்லையில் பல வருடங்களாக பாதை வசதி இல்லாமல் ஏராளமான குடும்பங்கள் வசித்து வந்தனர். அதனால் தங்கள் குடியிருப்பு பகுதிக்கு பாதை வசதி வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமுவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். ஒரு மாணவியும் மாவட்ட ஆட்சியரிடம் தனியாக ஒரு கோரிக்கை மனு அனுப்பி இருந்தார்.

Advertisment

இந்த மனுக்கள் சம்பந்தமாக புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் ஆலங்குடி வட்டாட்சியர் செந்தில்நாயகி, கீரமங்கலம் வருவாய் ஆய்வாளர் ரவி, செரியலூர் கிராம நிர்வாக அலுவலர் அருள்வேந்தன் மற்றும் உள்ளாட்சிபிரதிநிதிகள் ஆகியோர் சம்பந்தப்பட்ட பகுதிக்குச் சென்று ஆய்வு செய்துள்ளனர். அந்தப் பகுதியில் ஏற்கனவே அரசு கணக்குகளில் பாதை இருந்தது தெரிய வந்தது.

 Revenue Commissioner constructed road single day town that has no roads many years

நிலவியல் பாதை இருப்பதை அறிந்த கோட்டாட்சியர் முருகேசன் அந்தப் பகுதியில் உள்ள நில உரிமையாளர்களிடம் பேசி பட்டா நிலமாக இருந்தாலும் நிலவியல் பாதை என்பது பதிவாகி உள்ளதால் அதனை யாராலும் தடுக்க முடியாது. அதனால் நிலவியல் பாதையை எடுக்கப் போகிறோம் என்று விளக்கமளித்ததுடன் வெள்ளிக்கிழமை வருவாய் துறை அதிகாரிகள், 2 பொக்லைன்களுடன் வந்து வரைபடத்தை பார்த்து நில அளவை செய்து புதிய பாதை அமைத்துள்ளார். சில இடங்களில் கிளம்பிய எதிர்ப்புகளையடுத்துஅவர்களிடம் சமாதானமாக பேசி பாதை அமைக்கப்பட்டது. இரவு 9 மணி வரை இருந்து பணிகள் முழுமையாக முடிவடைந்த பிறகே சக அதிகாரிகளுடன் அங்கிருந்து கிளம்பினார்.

Advertisment

பல வருடப் பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு கண்டு புதிய பாதை அமைத்துக் கொடுக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, களத்தில் நின்று பாதையை அமைத்த கோட்டாட்சியர் முருகேசன்மற்றும் வருவாய்த்துறையினர், காவல் ஆய்வாளர் பாஸ்கரன் உள்ளிட்டவர்களுக்கு அப்பகுதி மக்கள் கண்ணீர் மல்க நன்றி கூறினார்கள்.