
மின்வாரியத்தில் பணிபுரிவோருக்கான ஓய்வுபெறும் வயது 59இல் இருந்து 60 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது. இதுகுறித்து பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில் தெரிவித்திருப்பதாவது, “அரசாணையின் அடிப்படையில் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் ஓய்வுபெறும் வயதை 58இல் இருந்து 59 ஆக உயர்த்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 59இல் இருந்து 60 வயதாக உயர்த்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும், இந்த உத்தரவு அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள், சட்ட மற்றும் அரசியலமைப்பு அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் போன்றவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் பொருந்தும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக மின்சார வாரியம் இதை கவனமாக பரிசீலித்த பின்னர், அரசாங்கத்தின் இந்த உத்தரவை ஏற்க முடிவு செய்துள்ளது. அதன்படி தமிழக மின்வாரியத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் ஓய்வு வயது 59இல் இருந்து 60 ஆக உயர்த்த வேண்டும் என உத்தரவிடப்படுகிறது. பணியில் உள்ள அனைவருக்கும் மற்றும் 31.5.2021 முதல் ஓய்வு பெறுவோருக்கும் இது பொருந்தும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.