results of Motor Vehicle Inspector job examinations  should be announced immediately

“6 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவை உடனே அறிவிக்க டி.என்.பி.எஸ்.சி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் போக்குவரத்துத் துறைக்கு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் 45 பேரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டித்தேர்வு அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி அறிவித்திருக்கிறது. அப்பணிக்கான போட்டித் தேர்வு வரும் 9-ஆம் தேதி நடத்தப்படவிருக்கும் நிலையில்,6 ஆண்டுகளுக்கு முன் இதே பணிக்காக நடத்தப்பட்ட போட்டித்தேர்வுகளின் முடிவுகளை வெளியிட டி.என்.பி.எஸ்.சி எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

Advertisment

மோட்டார் வாகன ஆய்வாளர்கள் 110 பேரை தேர்ந்தெடுப்பதற்காக 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கையின் அடிப்படையில் விண்ணப்பித்தவர்களுக்கு 10.06.2018-ஆம் நாள் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. வழக்கமாக தேர்வு நடத்தப்பட்டு இரு மாதங்களில் முடிவுகள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 6 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை அத்தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்படவில்லை. அதற்கு முழுக்க முழுக்க டி.என்.பி.எஸ்.சி அமைப்பு தான் பொறுப்பேற்க வேண்டும்.

டி.என்.பி.எஸ்.சி நடத்திய மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது முதல் தேர்வு நடத்தப்பட்டது வரை ஏராளமான குழப்பங்கள் நிகழ்ந்தன. அதனால், பாதிக்கப்பட்ட தேர்வர்கள் பல வழக்குகளைத் தொடர்ந்தனர். அந்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தின் இன்றும் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகள் ஒவ்வொரு முறை விசாரணைக்கு வரும் போதும் விசாரணையை ஒத்திவைக்கக் கோருவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கும் டி.என்.பி.எஸ்.சி, வழக்கை முடிவுக்கு கொண்டு வர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், 6 ஆண்டுகளுக்கு முன் தேர்வு எழுதிய தேர்வர்கள் தங்களின் எதிர்காலம் என்னவாகும்? என்பது தெரியாமல் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

Advertisment

தமிழ்நாட்டில் மொத்தம் 190 மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்கள் உள்ளன. அவற்றில் 4 இடங்களைத் தவிர மீதமுள்ள அனைத்து இடங்களும் காலியாகத் தான் உள்ளன. அதனால், காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுப்பது தவிர்க்க முடியாதது. அந்த வகையில் இப்போது 45 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவது வரவேற்கத்தக்கது தான். ஆனால், 110 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வின் முடிவுகளை வெளியிடாமல் புதிய மோட்டார் வாகன ஆய்வாளர்களை தேர்வு செய்வது பல சிக்கல்களை உருவாக்கும்.

6 ஆண்டுகளுக்கு முன் தேர்வு எழுதியவர்கள் பணியில் அமர்த்தப்படாமல், புதிதாக தேர்வு செய்யப்படுபவர்கள் பணியமர்த்தப்பட்டால் யாருக்கு பணிமூப்பு வழங்குவது என்பதில் குழப்பம் உண்டாகும். அதைத் தவிர்க்கும் வகையில் 45 மோட்டார் வாகன ஆய்வாளர்களை நியமிப்பதற்கான தேர்வின் முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்பாகவே 2018-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட 110 பேரை தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வு முடிவுகளை அறிவித்து அவர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.