ADVERTISEMENT

சமயோசிதமாகச் செயல்பட்ட முதிய தம்பதியினர்; வெகுமதி வழங்கிய முதல்வர்!

05:47 PM Feb 27, 2024 | kalaimohan

தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் புளியரை கிராமம், 'எஸ்' - வளைவு என்ற தமிழக - கேரள எல்லைப் பகுதியில் கடந்த 25 ஆம் தேதி (25.02.2024) நள்ளிரவு 1.00 மணி அளவில் திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது இந்த லாரி நிலை தடுமாறி 40 அடி உயரத்திலிருந்து கவிழ்ந்து கீழே செல்லும் செங்கோட்டை - கொல்லம் ரயில் மார்க்கத்திலுள்ள தண்டவாளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது.

ADVERTISEMENT

அப்போது அப்பகுதியில் வசித்து வந்த சண்முகையா - வடக்குத்தியாள் என்ற தம்பதியினர் செங்கோட்டையிலிருந்து புனலூர் நோக்கி வந்துகொண்டிருந்த பகவதியம்மன் கோவில் திருவிழா சிறப்புப் பயணிகள் ரயில் வரும் சத்தத்தைக் கேட்டு நிலைமையின் தீவிரத்தை உணர்ந்துள்ளனர். அதன் பின்னர் தண்டவாளத்தில் சிறிது தூரம் ஓடிச்சென்று கையில் வைத்திருந்த டார்ச் லைட் ஒளியின் மூலம் ரயில் ஓட்டுநரிடம் சைகை காண்பித்து ரயிலை நிறுத்தி ஏற்படவிருந்த பெரும் விபத்தை தடுத்துள்ளனர்.

ADVERTISEMENT

மேலும் இது குறித்து உடனடியாகத் தகவலறிந்த காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து பொதுமக்களுடன் இணைந்து தண்டவாளத்தில் விழுந்து கிடந்த லாரியினை அப்புறப்படுத்தியுள்ளனர். அதே சமயம் சென்னையிலிருந்து கொல்லம் நோக்கிச் சென்ற விரைவு ரயிலும் செங்கோட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. தங்களது முதிர்ந்த வயதையும், இருள் சூழ்ந்திருந்த நள்ளிரவு நேரத்தையும் பொருட்படுத்தாமல், பெரும் விபத்து நிகழ்வதைத் தடுத்து நிறுத்தும் ஒரே நோக்கத்துடன் தண்டவாளத்தில் ஓடிச்சென்று ரயிலை நிறுத்திய சண்முகையா - வடக்குத்தியாள் தம்பதியினரின் வீரதீரச் செயலைப் பாராட்டிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் வெகுமதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT