The resolutions proposed by CM MK Stalin were passed unanimously

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் (12.02.2024) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரின் 3 வது நாளான இன்று (14.2.2024) சட்டப் பேரவையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ‘ஒரே நாடு - ஒரே தேர்தல்’ திட்டத்தினை மத்திய அரசு நடைமுறைப்படுத்தக் கூடாது என்றும், 2026 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி தனித் தீர்மானங்களை கொண்டு வந்தார்.

அதன்படி தீர்மானங்களை முன்மொழிந்து உரையாற்றுகையில், “தீர்மானம் 1 : 2026 ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையைக் கைவிட வேண்டும். தவிர்க்க இயலாத காரணங்களினால் மக்கள்தொகையின் அடிப்படையில் சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டால், 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் தற்பொழுது மாநிலச் சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ அதே விகிதத்தில் தொடர்ந்து இருக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது. மக்கள் நலன் கருதி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சமூகப் பொருளாதார வளர்ச்சி திட்டங்களையும் மக்கள் நல்வாழ்வு திட்டங்களையும் சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்றும் இந்தப் பேரவை வலியுறுத்துகிறது என்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன்.

தீர்மானம் 2 : ‘ஒரு நாடு ஒரு தேர்தல்' என்ற கோட்பாடு மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்பதாலும்; நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்று என்பதாலும்; அது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வகுக்கப்படாத ஒன்று என்பதாலும்; இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட பரந்து விரிந்த நாட்டில் உள்ளாட்சி அமைப்புகள், மாநிலச் சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்கான தேர்தல்கள் பல்வேறு காலகட்டங்களில் மக்கள் பிரச்சினைகளை முன்வைத்தே நடத்தப்படுவதாலும்; அதிகாரப் பரவலாக்கல் என்ற கருத்தியலுக்கு அது எதிரானது என்பதாலும் 'ஒரு நாடு ஒரு தேர்தல்' திட்டத்தினை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று மத்தியஅரசை இந்தப் பேரவை வலியுறுத்துகிறது. இந்த இரண்டு தீர்மானங்களையும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக நிறைவேற்றித் தரவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து இரு தனித் தீர்மானத்தின் மீதும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரித்து பேசினர். அதனைத் தொடர்ந்து இரு தீர்மானங்களும் ஒருமனதாக குரல் வாக்கெடுப்பு மூலம்நிறைவேற்றப்பட்டுள்ளன.