Resolution of the Union Committee to create a new district headed by Vriddhachalam

Advertisment

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்ட அரங்கில், ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது. ஒன்றியக் குழுத் தலைவர் செல்லத்துரை தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு துணைத்தலைவர் பூங்கோதை முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமாரி வரவேற்றார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவா தீர்மானங்களை வாசித்தார். இதில் வரவு,செலவு கணக்குகள் கவுன்சிலர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் பேசிய பா.ம.க உறுப்பினர் செல்வராஜ்,"குப்பநத்தம் - நறுமணம் ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிநிற்கும் மழைநீரை அகற்றி, மழைக்காலங்களில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கநடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். இதேபோல் மற்றொரு பா.ம.க உறுப்பினர் சரவணன் பேசும்போது, "எ.வடக்குப்பம் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டதில் இருந்து இதுவரை போக்குவரத்திற்குப் பயனின்றி கிடக்கிறது. உடனடியாக அதில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றி, மேலும் மழைநீர் தேங்காமல் இருக்கநடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

தி.மு.க உறுப்பினர் பச்சமுத்து பேசும்போது, "தீர்மான நகலைப் படித்ததும் மனத்துயரம் தான் ஏற்படுகிறது. எங்கள் பகுதியில் கட்டிடம் இடிக்கும் பணி கூட எங்களுக்குத் தெரியவில்லை. வரவு,செலவு கணக்குகளை முழுமையாகத் தெரியப்படுத்த வேண்டும். இருப்பு உள்ள நிதியை முழுமையாகத் தெரியப்படுத்த வேண்டும். அனைத்து கவுன்சிலர்களுக்கும் முறையான நிதி ஒதுக்க வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார்.

Advertisment

உறுப்பினர்களின் கேள்விக்குப் பதிலளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமாரி, "உறுப்பினர்களின் கோரிக்கைகள்,வேண்டுகோள்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்"எனக் கூறினார்.

இக்கூட்டத்தில் ஒன்றியக் குழு தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட 14 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். ஐந்து கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. கூட்டத்தின் முடிவில் 16 ஆவது வார்டு ஆலிச்சிக்குடி ஒன்றிய கவுன்சிலர் செந்தில்குமார் அனைத்து கவுன்சிலர்களுக்கும் உரிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை எனக் கூறி தீர்மான நகலில் கையெழுத்திடாமல் வெளியேறினார்.

கூட்டத்தில், "கடலூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்" என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.