Advertisment

திமுக மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்; சுற்றுலா சென்ற கவுன்சிலர்கள்!

Resolution of no confidence against Kanchipuram Mayor

காஞ்சிபுரம் மாநகராட்சியில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமகஎன மொத்தம் 51 கவுன்சிலர்கள் உள்ள நிலையில் திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் மகாலட்சுமி யுவராஜ் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குமரகுருபரன் துணை மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து இருவரும் பதவி வகுத்து வந்த நிலையில், திமுக மேயர் மகாலட்சுமி பதவியேற்றதிலிருந்தே அவருக்கு எதிராக மற்ற கட்சியினர் குற்றம் சாட்டி வந்தனர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாகவே திமுக கவுன்சிலர்களும் கூட மகாலட்சுமிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர். மேலும் மகாலட்சுமியை மேயர் பொறுப்பிலிருந்து அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துவந்தனர். இந்த விவகாரம் மேலிடத்திற்குத் தெரியவர, உடனே அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அதுவும் தோல்வியில் முடிய மகாலட்சுமி பதவி விலக வேண்டும் என்ற கோஷம் வலுக்கத் தொடங்கியது. இதையடுத்து, மேயர் மகாலட்சுமி தொடர்பாக நம்பிக்கையில்ல தீர்மானம், வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிப்பைக் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் வெளியிட்டார்.

Advertisment

இதனிடையே திமுக அமைப்பு துணை செயலாளர் அன்பகம் கலை திமுக கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், தங்கள் நிலைப்பாட்டிலிருந்து மாற மாட்டோம் என்று கவுன்சிலர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆணையர் செந்தில் முருகன் அறிவித்தபடி இன்று மாநகராட்சி கூட்டத்தில் மகாலட்சுமிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு வாக்கெடுப்பு நடைபெறுவதாக இருந்த நிலையில், மேயருக்கு எதிராக இருந்த 35 கவுன்சிலர்கள் மற்றும் மேயர் தரப்பு கவுன்சிலர்கள் 10 பேர் காஞ்சிபுரத்தில் இருந்து குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளனர்.

மேயர் மகாலட்சுமியை பதவிநீக்கம் செய்ய 5 இல் 4 பங்கு கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். இந்த நிலையில் கவுன்சிலர்கள் சுற்றுலா சென்றதால், மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் யாரும் வாக்களிக்க வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்தச் சூழலே தொடர்ந்தால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்து மகாலட்சுமியே மேயராக தொடர வாய்ப்பு உள்ளது. இதனிடையே சுற்றுலாச் சென்ற கவுன்சிலர்கள் மகாபலிபுரத்தில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்கவைக்கப்பட்டு தற்போது அனைவரும் வீட்டிற்குப் புறப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

mayor kanjipuram
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe