'Resolution of condolence for Vijayakanth' - DMK general committee begins

மதுரை உத்தங்குடியில் திமுக பொதுக்குழு கூட்டம் இன்று (01.06.2025) தொடங்கியுள்ளது. இதற்காக திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று (31.05.2025) மதியம் மதுரைக்குச் சென்றடைந்தார். அதன்படி விமான நிலையத்திற்கு வந்திருந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மூத்த அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.என்.நேரு மற்றும் உட்பட பல்வேறு தரப்பினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து ரோட் ஷோவும் நடைபெற்றது.

இந்நிலையில் தற்போது பொதுக்குழு தொடங்கியுள்ளது. பொதுக்குழு மேடைக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மேடையில் உள்ள அண்ணா, கலைஞர், அன்பழகன் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு உள்ளிட்டோர் மேடையில் இடம் பெற்றுள்ளனர். அதேபோல் அமைச்சர் மூர்த்தி, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, ஆ.ராசா உள்ளிட்டோரும் மேடையில் உள்ளனர்.

முன்னதாக இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங், பெரியார் சிந்தனையாளர் ஆனைமுத்து, போப், சீதாராம் யெச்சூரி, சங்கரய்யா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பகல்ஹாம்தாக்குதலில் உயிரிழந்தவர்கள்உள்ளிட்ட பலரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து அரசியல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.