Skip to main content

கடலில் பாலம் அமைக்க எதிர்ப்பு;நூற்றுக்கணக்கான படகில் மீனவர்கள் கடல் முற்றுகைப் போராட்டம்!!

 

 

800 மெகாவாட் கொண்ட 2 அலகுகளுடன் கூடிய உடன்குடி அனல் மின் நிலையம், தூத்துக்குடி மாவட்டமான உடன்குடியில் அமைய விருக்கிறது. 2009ல் மத்திய அரசின் அமைச்சர் ஜெயராம் ரமேஷால் அடிக்கல் நாட்டப்பட்டு பின் அத்திட்டம் கிடப்பில் வைக்கப்பட்ட நேரத்தில், அதனை தமிழக அரசே செயல்படுத்தும் என்று அறிவித்தவர் ஜெயலலிதா.

 

அதன் பின் டெண்டர் பணிகளால் தாமதமான, அத்திட்டம் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி 7259 கோடியில் அமைக்கப்படும் என அறிவித்து வீடியோ கான்ஃபரன்சிங்கு மூலம் அடிக்கல் நாட்டினர்.

 

உடன்குடியில் அமையவிருக்கும் அந்த அனல் மின் நிலையத்திற்குத் தேவையான மூலப்பொருள் நிலக்கரியை கடல் வழியாகக் கொண்டு வந்து குலசேகரப்பட்டணம் அருகில் உள்ள கல்லாமொழிக் கடற்கரையின் மூலம் இறக்குமதி செய்து அனல் மின் நிலையம் கொண்டு வருவதற்காக கல்லாமொழி கடலில் உள்ளே சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவு பாலம் அமைத்து கொண்டு வரப்படும் நிலக்கரியை கொண்டு செல்ல அங்கு நிலக்கரி இறங்கு தளம் அமைக்கப்படுகிறது. பின்பு நிலக்கரியை அங்கிருந்து அனல் மின் நிலையத்திற்கு கன்வேயர் பெல்ட் மூலம் கொண்டு செல்லப்படும்.

 

இந்தக் கடல் பாலம் அமைக்கப்படுவதால் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்வது தடைபடும், மேலும் 9 கிலோ மீட்டர் தொலைவு பாலம் அமைப்பது கடல் வாழ் மீன் இனங்களை இடம் பெறச் செய்து விடும். கடலின் மாசு கெடுவதோடு ஆயிரக்கணக்கான சுற்றுப் பகுதி ஆலந்தலை அமலி நகர் மணப்பாடு குலசேகரன்பட்டினம், கல்லாமொழி உள்ளிட்ட மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்ப்டும் என மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

ஆனால் பணிகள் தீவிரமாக நடப்பதை அறிந்த சுற்று வட்டார 20 கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 200க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் கருப்புக் கொடி கட்டியவாறு கடல் வழியாக நிலக்கரி இறங்கு தளத்தை முற்றுகையிட்டனர். இதில் பெரியதாழை வரையிலான கடற்கரை மக்களின் படகுகளும் வரிசை கட்டியிருத்தன. அரசுக் கெதிரான கோஷங்களோடு மீனவர்களை வாழ விடு உள்ளிட்ட கோஷங்களையும் எழுப்பினர்.

 

மீனவ மக்களின் போராட்டம், காரணமாக நெல்லை சரக டி.ஐ.ஜி.கபில்குமார் சராட்கர் தலைமையில் தூத்துக்குடி எஸ்.பி.முரளிரம்பா கண்காணிப்பில் போலீசார் குவிக்கப்பட்டனர். சாலைகளில் செக் கோஸ்ட் அமைக்கப்பட்டு வாகனங்கள் தடுக்கப்பட்டன பத்திரிகையாளர்களைக் கூட உள்ளே அனுமதிக்காமல் தடையும் போடப்பட்டது.

 

அனல் மின் நிலையம் கூடாது என்று நாங்கள் எதிர்க்க வில்லை. அதற்கு தேவையான நிலக்கரியை கொண்டுவர தரை, மற்றும் ரயில்வே மார்க்கம் இருக்கையில் கடல் வாழ் ஆதராத்தை அழித்து எங்களின் பிழைப்பையும் தகர்க்க வேண்டுமா என்பது தான் எங்களின் கருத்து. எதிர்ப்பு என ஒட்டு மொத்த மீனவர்களும் கல்லாமொழி பங்குத் தந்தையான ஜேம்ஸ பீட்டரும் சொல்கிறனர். இதன் காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்கவும் செல்லவில்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

சார்ந்த செய்திகள்