Skip to main content

குவைத் தீ விபத்தில் காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் உயிரிழப்பு!

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
a resident of Kattumannarkoil was killed in a fire accident in Kuwait

குவைத் தீ விபத்தில் காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார். இவர் 2 வாரங்களில் சொந்த ஊர் திரும்புவதாக இருந்த நேரத்தில் இந்தச் சோகம் நடந்துள்ளது.  

குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர். இதில் 5 தமிழர்கள் உயிரிழந்தாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள முட்டம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சின்னதுரை(42) என்பவர்  குவைத் விபத்தில்  உயிரிழந்துள்ளார். 

இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவருக்கு திருமணமாகி 5 வருடம் ஆகிறது, சத்யா என்ற மனைவி உள்ளார் குழந்தைகள் கிடையாது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக குவைத்தில் பணியாற்றி வந்த நிலையில் குடும்பத்தினருடன் இருப்பதற்காக வேலைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் சொந்த ஊருக்கு திரும்பி குடும்பத்தினருடன்  இருந்து வந்துள்ளார். 

a resident of Kattumannarkoil was killed in a fire accident in Kuwait

இந்த நிலையில் மீண்டும் குவைத் கம்பெனியிலிருந்து வருமாறு கூறியதால் கடந்த ஆறு மாதம் முன்பு மீண்டும் குவைத் சென்று வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் அவர் 2 வாரங்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு வருவதாகவும் இருந்துள்ளார். இந்த நிலையில் அவர் தீ விபத்தில் உயிரிழந்தது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவரது மனைவி சத்யா கண்ணீருடன் கூறுகையில், எனது கணவர் சின்னதுரை உடலை சொந்த ஊருக்கு உடனடியாக கொண்டு வர வேண்டும். தமிழக முதல்வரும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார் .

சார்ந்த செய்திகள்

 

Next Story

குவைத் தீ விபத்து; தாயகம் வந்தது இந்தியர்களின் உடல்!

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
kuwait fire Indians came home town

குவைத் நாட்டில் மங்காப் என்ற பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் நேற்று முன்தினம் (12.06.2024) அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விபத்து நிகழ்ந்த கட்டடத்திலிருந்த 195 பேரில் 175 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் வெளியானது. இந்தத் தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மலையாள மக்கள் அதிகம் வசிக்கும் இடத்தில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்தில் தமிழர்கள் 7 பேர் உயிரிழந்தனர்.

இதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீராசாமி மாரியப்பன், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த எபமேசன் ராஜு, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி சின்னதுரை, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தன் சிவசங்கர், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த புனாஃப் ரிச்சர்ட் ராய், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பணன் இராமு மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஷெரிப் ஆகிய தமிழர்கள் உயிரிழந்தனர். அதே சமயம் தீ விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

kuwait fire Indians came home town

இத்தகைய சூழலில்தான் குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 இந்தியர்களின் உடல்கள் இந்திய ராணுவ விமானத்தின் மூலம் கேரளாவில் உள்ள கொச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த விமானம் பின்னர் அங்கிருந்து டெல்லிக்கு செல்கிறது. முன்னதாக தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்களைப் பெற்ற கொச்சி விமான நிலையத்திற்கு சென்றுள்ள அமைச்சர் செஞ்சி மஸ்தான் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில் இந்தத் தீ விபத்தில் பலியான 45 இந்தியர்களின் உடல்களை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் காலை 10.30 மணிக்கு கொச்சி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இதனையடுத்து தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர், கேரளாவைச் சேர்ந்த 23 பேர், கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளன. 

Next Story

குவைத் தீ விபத்து; முதல்வர் மு.க. ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு!

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
Kuwait fire; Chief Minister M.K. Stalin's funding announcement

குவைத் நாட்டில் மங்காப் என்ற பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் நேற்று முன்தினம் (12.06.2024) அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விபத்து நிகழ்ந்த கட்டடத்திலிருந்த 195 பேரில் 175 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் வெளியானது. இந்த தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மலையாள மக்கள் அதிகம் வசிக்கும் இடத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் தமிழர் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் ஏற்பட்ட மீட்புப் பணிகள் நடைபெற்றன. அதே சமயம் தீ விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “குவைத் நாட்டின் மங்காப் என்ற இடத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் நேற்று முன்தினம் (12.06.2024) தீ விபத்து ஏற்பட்டது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீராசாமி மாரியப்பன், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த எபமேசன் ராஜு, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி சின்னதுரை, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தன் சிவசங்கர், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த புனாஃப் ரிச்சர்ட் ராய், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பணன் இராமு மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஷெரிப் ஆகிய தமிழர்கள் உயிரிழந்துள்ளார்கள் என்ற செய்தியை அறிந்து மிகவும் அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்து வருகிறேன். 

Kuwait fire; Chief Minister M.K. Stalin's funding announcement

உயிரிழந்தவர்களின் உடல்களைத் தமிழ்நாட்டிற்கு உடனடியாகக் கொண்டு வருவதற்குக் குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளுடன் இணைந்து, நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அயலகத் தமிழர் நலத்துறைக்கு உரிய அறிவுரைகளை வழங்கியுள்ளேன். அதன் பயனாக, உயிரிழந்த ஏழு தமிழர்களின் உடல்களும், தனிவிமானத்தின் மூலம் இந்தியாவிற்குக் கொண்டுவர விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவை வந்தடையும், தமிழர்களின் உடல்களை உடனடியாகத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்து, அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணிகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும், தமிழ்நாடு அரசின் சார்பில் தலா 5 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இது மட்டுமல்லாமல், இந்தக் கொடிய தீவிபத்தில் காயமடைந்து, குவைத் நாட்டிலேயே, சிகிச்சை பெற்று வரும் நம் தமிழ்ச்சொந்தங்கள் தொடர்பான விவரங்களைத் திரட்டிடுமாறு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறைக்கு நான் அறிவுரை வழங்கியதையொட்டி, உரிய நடவடிக்கைகளை அத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைந்து குணமடையத் தேவையான உதவிகளை குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகத்துடன் இணைந்து அயலகத் தமிழர் நலத்துறை துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

Kuwait fire; Chief Minister M.K. Stalin's funding announcement

குவைத் நாட்டில் பணிபுரிந்து வரும் தமிழர்கள், அங்கு கொடிய தீவிபத்திற்கு ஆளானதுடன், உயிர்களை இழந்தும், தீக்காயங்களுக்குச் சிகிச்சைகள் பெற்றும் வரும் நிலையை எண்ணி, வேதனையில் ஆழ்ந்துள்ள என் அருமை தமிழ்நாட்டு உறவினர்களுக்கு, தமிழ்நாடு அரசு எல்லா உதவிகளையும் வழங்கிடத் தயாராக இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த விபத்து தொடர்பான விவரங்களை அறிந்து கொள்வதற்கு அயலகத் தமிழர் நலத்துறையின் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். அதன்படி இந்தியாவிற்குள் தொடர்பு கொள்வதற்கு உரிய தொலைபேசி எண். +91 1800 309 3793; அதே போன்று குவைத் நாட்டில் தொடர்பு கொள்வதற்கு உரிய தொலைபேசி எண் +91 80 6900 9900, +91 80 6900 9901. இந்த இரண்டு எண்கள் வாயிலாகவும், அயலகத் தமிழர் நலத்துறையைத் தொடர்பு கொண்டு தேவைப்படும் தகவல்களைப் பெற்றிடுமாறும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்கள் கொச்சி கொண்டு வரப்பட உள்ளது. இதற்காக அமைச்சர் செஞ்சி மஸ்தான் சென்னையில் இருந்து கொச்சி விரைந்துள்ளார். கொச்சியில் இருந்து உடல்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் ஏற்பாடுகளும் தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சர் செஞ்சி மஸ்தான் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து இந்த தகவலைத் தெரிவித்தார்.