Skip to main content

காவல்துறை அறிவியல் மாநாட்டில் பெண் டி.எஸ்.பி சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரை!

Published on 26/04/2022 | Edited on 26/04/2022

 

Research paper submitted by a female DSP at the Police Science Conference!

 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி டி.எஸ்.பியாக பணிபுரிந்து வருபவர் பிரியதர்ஷினி. உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய காவல் ஆராய்ச்சி மையத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய காவல்துறை அதிகாரிகளின் அறிவியல் மாநாடு நடத்தப்படும். அதற்கான மாநாடு இந்த ஆண்டு மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் கடந்த 22ஆம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடந்தது. இதில் இவர் ஒரு ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்துள்ளார்.


இந்த மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா துவக்கி வைத்து பேசும்போது, காவல் நிலையங்களில் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. மேலும் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தை பயன்படுத்த வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது. அதன்மூலம் காவல்நிலைய வன்முறைகள் விதிமுறை மீறல்கள் ஆகியவற்றை தடுக்க வேண்டும் என்பது குறித்தும் பேசினார். 


இந்திய அளவில் பல காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் காவல்துறையில் பணிபுரியும் பலர் பல ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். அதில் தமிழ்நாட்டை சேர்ந்த செஞ்சி டி.எஸ்.பி பிரியதர்ஷினி கலந்துகொண்டு, ஒரு ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்துள்ளார். 


அந்த கட்டுரையில், குற்றவாளிகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான நபர்களின் விழிகளை கேமரா மூலம் கண்காணித்து, அவர்கள் வெளிப்படுத்தும் தகவல்கள் உண்மைதானா என்பதை கண்டறிய முடியும் என்று அந்தக் கட்டுரையில் தெரிவித்துள்ளார். மேலும், அதுகுறித்து விளக்கத்தையும் அளித்துள்ளார்.

 

சில உலக நாடுகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வரும் இந்த விழித்திரை புலன் விசாரணையின் தொழில் நுட்பத்தின் முக்கியத்துவத்தைப் பற்றியும் அதை பயன்படுத்துவது குறித்தும் அதை இந்தியாவில் அறிமுகப்படுத்த வேண்டிய அவசியத்தை குறித்தும் பேசிய அவர், இதனால் காவல் துறையில் ஏற்படும் காலதாமதத்தை குறைக்க முடியும் தற்போது நடைமுறையில் உள்ள டி.என்.ஏ போன்ற சோதனை முறைகளால் ஒரு வழக்கிற்கு ஆகும் செலவை குறைப்பது பற்றியும் விளக்கிக் கூறினார். 


இந்த விழித்திரை புலன்விசாரணை மூலம் அதிக செலவில்லாமல் காலதாமதம் இல்லாமலும் காவல் துறையினர் சிறப்பாக செயல்பட முடியும் அதன் மூலம் குற்றவாளிகளை உடனுக்குடன் கண்டறிய முடியும் அதற்காக இந்திய நடைமுறை சட்டம் சாட்சிய சட்டம் ஆகியவற்றில் மேற்கொள்ளவேண்டிய மாறுதல்கள் குறித்தும் விளக்கியுள்ளார். 


இவரின் இந்த கருத்துக்களை ஏற்றுக் கொண்ட காவல்துறை உயரதிகாரிகள் தற்போது உள்ள சூழ்நிலையில் இது அவசியமான ஒன்றுதான் என்று தங்கள் கருத்துக்களை அங்கு தெரிவித்துள்ளனர். அதோடு டி.எஸ்.பி பிரியதர்ஷினியின் ஆய்வுக் கட்டுரையை வெகுவாக பாராட்டியும் உள்ளனர். காவல்துறையில் உள்ள ஒரு பெண் டி.எஸ்.பி தனது சிரமமான பணிகளுக்கு இடையே இப்படி ஒரு ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்து வெற்றி கண்டுள்ளார் என்பதை காவல் துறையில் உள்ளவர்கள் பெருமிதத்துடன் சந்தோஷத்துடன் கூறி டிஎஸ்பி பிரியதர்ஷினிக்கு வாழ்த்துக்களை வழங்கி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்