Skip to main content

16 மணி நேரப் போராட்டம்; மீண்டும் இருப்பிடம் சென்ற சிறுத்தைப் புலி

Published on 22/07/2023 | Edited on 22/07/2023

 

Rescue of a tiger that fell into a well in Sathyamangalam forest

 

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி செல்லும் திண்டுக்கல் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில்  பண்ணாரி அம்மன் கோவில் அருகே புது குய்யனூர் பிரிவு பஸ் ஸ்டாபில் இருந்து சில அடி தொலைவில் தண்ணீர் இல்லாத சுமார் 60 அடி ஆழமுள்ள பாழடைந்த  கிணறு உள்ளது. நேற்று  வெள்ளிக்கிழமை அதிகாலை அந்தப் பகுதி இளைஞர்கள் சிலர் அவ்வழியாகச் சென்றபோது கிணற்றில் இருந்து ஒரு விதமான சத்தம் கேட்டு அந்த கிணற்றின் அருகே சென்று எட்டிப் பார்த்துள்ளனர். அப்போது அந்தக் கிணற்றிற்குள் சிறுத்தை ஒன்று உறுமியபடி படுத்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்தத் தகவலை சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு உடனே தெரிவித்தனர். 

 

கிராம மக்கள் கொடுத்த தகவலைத் தொடர்ந்து அங்கு வந்த வனத்துறை ஊழியர்கள், கிணற்றில் விழுந்த விலங்கு சிறுத்தை எனவும், சிறுத்தைக்கு சுமார் 6 வயது இருக்கும் எனவும் உயரதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதுகுறித்த செய்தி பரவ, சிறுத்தையைப் பார்க்கும் ஆவலில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அப்பகுதியில் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேரம் ஆக ஆகத் தண்ணீர் இன்றி சிறுத்தை தவித்தது. முதல் கட்டமாகத் தீயணைப்புத்துறையினர் மூலம் ஏணியைக் கிணற்றில இறக்கி அதன் வழியாகச் சிறுத்தை ஏறி காட்டிற்குள் சென்றுவிடும் என முயற்சி செய்யப்பட்டது. ஆனால் சிறுத்தை அங்கு கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்து மேலே வராமல் உள்ளே சுற்றித் திரிந்தது. அடுத்ததாக சிறுத்தையைப் பிடிக்க, கூண்டில் கோழியைக் கட்டி இறக்கிப் பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். அந்தக் கூண்டு சிறிதாக இருந்ததால் அதில் சிக்காமல் சிறுத்தை போக்கு காட்டியது. மீண்டும் பெரிய கூண்டு வரவழைக்கப்பட்டு அந்தக் கூண்டில் ஆட்டின் இறைச்சி மற்றும் உயிருடன் உள்ள ஒரு ஆட்டையும் கட்டி அந்தக் கூண்டை கிணற்றில் இறக்கி விட்டுக் காத்திருந்தனர். 

 

Rescue of a tiger that fell into a well in Sathyamangalam forest

 

மே...மே... என ஆடு கத்த, சுவையான உணவு கிடைத்ததுபோல் ஆர்வமாக, ஆவேசமாக அந்த ஆட்டை ருசி பார்க்கத் துடித்த சிறுத்தை, ஆட்டைப் பிடிக்கச் சென்று அந்தக் கூண்டில் மாட்டிக்கொண்டது. வனத்துறையினர் அந்தக் கூண்டை கிரேன் உதவியுடன் கிணற்றிலிருந்து வெளியே கொண்டு வந்தனர்.  உணவு, தண்ணீர் இன்றி இருந்ததால் மிகவும் ஆக்ரோஷமாக சிறுத்தை காணப்பட்டது.  

 

சிறுத்தையைப் பார்க்க ஏராளமானோர் குவிந்ததால் பாதுகாப்புப் பணியில் போலீஸார் ஈடுபட்டனர்.  சிறுத்தையை மீட்கும் பணியில் சத்தி ரேஞ்சர் பழனிசாமி, பவானி சாகர் ரேஞ்சர் சிவக்குமார், வனவர் தீபக், வனத்துறை ஊழியர்கள் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் ஈடுபட்டனர். வனத்துறையினர் கூறும்போது, தெங்குமரஹாடா வனப்பகுதியில் மங்களப்பட்டி என்ற இடத்தில் விடுவதாகத் தெரிவித்தனர்.

 

Rescue of a tiger that fell into a well in Sathyamangalam forest

 

அதேபோல் சிறுத்தையைத் தெங்குமரஹாடா அருகே மங்களப்பட்டியின் அடர்ந்த வனப்பகுதியில் நள்ளிரவு கொண்டு சென்று விட்டனர். கூண்டிலிருந்து வெளியே தாவிக் குதித்து காட்டுக்குள் வேகமாக மீண்டும் வனம் என்ற தனது இருப்பிடம் நோக்கி பறந்து சென்றது சிறுத்தைப் புலி.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிக்காத சிறுத்தை! பிடிக்க முடியாமல் தடுமாறும் வனத்துறை!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 forest department is struggling to catch the elusive leopard

கடந்த 2ஆம் தேதி மயிலாடுதுறை சுற்றியுள்ள பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து பயிற்சி பெற்ற அனுபவம் வாய்ந்த வனத்துறையினர் மற்றும் அதிகாரிகளை வரவழைத்து, தனிக்குழு அமைத்து அந்தச் சிறுத்தையின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

அதன்படி, சிறுத்தையின் காலடித்தடம் அது சிறுநீர் கழித்ததற்கான அடையாளம், அதன் கழிவு ஆகியவற்றை அடையாளம் கண்டு, சிறுத்தை மயிலாடுதுறை பகுதியில் நடமாடுவதை உறுதி செய்தனர். அதைப் பிடிப்பதற்காக வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை செய்து வந்த நிலையில், நான்கு தினங்களுக்கு முன் அரியலூர் மாவட்டம் செந்துறை நகரப் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை பொதுமக்கள் பார்த்தனர். இது குறித்து அரியலூர் வனத்துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அப்பகுதி இளைஞர்களுடன் சிறுத்தையைப் பிடிப்பதற்கு முயற்சி செய்தனர்.

 forest department is struggling to catch the elusive leopard

ஒரு லேத் பட்டறையில் பதுங்கி இருந்த சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓடியதைப் பலரும் பார்த்தனர். இதையடுத்து சிறப்பு குழுவினர் பெரிய கூண்டை கொண்டு வந்து செந்துரை அருகே உள்ள ஓடை பகுதியில் கூண்டுக்குள் ஆட்டை அடைத்து வைத்தனர். ஆடு கத்தும் சத்தத்தை கேட்டு ஆட்டை உணவாக சாப்பிட்டு சிறுத்தை அந்த கூண்டை தேடி வரும் அப்போது அதில் மாட்டிக்கொள்ளும் வகையில் தயார் நிலையில் வைத்திருந்தனர். ஆனால் சிறுத்தை அந்தக் கூண்டுக்குள் வந்து சிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து செந்துறையைச் சுற்றிலும் உள்ள முந்தரிக்காட்டு பகுதிகளுக்குள் சிறுத்தை பதுங்கி இருக்கலாம் என்று ட்ரோன் கேமரா மூலம் தேடுதல் வேட்டை நடத்தினர். சிறுத்தை நடமாட்டத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுத்தை அரியலூர் மாவட்டத்திலிருந்து பெரம்பலூர் மாவட்டம் அல்லது அருகில் உள்ள கடலூர் மாவட்ட பகுதிகளுக்குள் சென்று இருக்கலாம் என்று வனத்துறையினர் கூறுகின்றனர். தற்போது நிலவரப்படி தினசரி ஒரு நாளைக்கு சுமார் 10 முதல் 15 கிலோமீட்டர் வரை சிறுத்தை இரவு நேரங்களில் இடம்பெயர்ந்து சென்றுள்ளது.

 forest department is struggling to catch the elusive leopard

இதனடிப்படையில் அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்ட எல்லைய ஒட்டிய கிராமங்களில் வனத்துறையினர் தங்களது கண்காணிப்பைத் தீவிர படுத்தியுள்ளனர். இதனைப்போன்று கடந்த 2013 ஆம் ஆண்டு பெரம்பலூர் நகரை ஒட்டி உள்ள பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததை பொதுமக்கள் பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது பெரம்பலூர் அருகில் உள்ள துறைமங்கலம், கவுல்பாளையம் ஆகிய பகுதிகளில் சிறுத்தையைத் தேடும் பணி தீவிரமாக நடந்தது. நீண்ட முயற்சிக்குப் பிறகு அப்பகுதியில் சிறுத்தையைப் பிடிக்க கூண்டுக்குள் ஆட்டை விட்டு காட்டுப்பகுதியில் வைத்தனர். அப்போது அந்தச் சிறுத்தை ஆடு கத்தும் சத்தத்தை கேட்டு அதை கடித்து தின்பதற்காக கூண்டுக்குள் சென்று சிக்கியது. இதனையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர், அந்தச் சிறுத்தையை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு கொண்டு சென்று விட்டனர். இவ்வாறு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை பெரம்பலூர் ,அரியலூர்,மாவட்டங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

Next Story

பெண் யானைக்கு உடல்நலக் குறைவு; பரிதவிக்கும் குட்டி!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Female elephant ill health Poor kid

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மேற்குத்தொடர்ச்சி வனப்பகுதியில் கோடைக் காலத்தையொட்டி கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் கடந்த 8 ஆம் தேதி குடிநீர் தேடி பெண் யானை ஒன்று அப்பகுதிக்கு வந்துள்ளது. அச்சமயத்தில் அங்குள்ள குழியில், இந்த பெண் யானை தவறி விழுந்துள்ளது. இதனால் உடல்நலம் குன்றிய பெண் யானை உயிருக்குப் போராடி வந்தது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பின்னர் மருத்துவ குழுவினருடன் அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் உடல்நலம் குன்றிய பெண் யானைக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் யானைக்கு உணவாக பசுந்தீவனம் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை கொடுக்கப்பட்டன.

இந்நிலையில் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி என்ற உடல்நலக்குறைவால் நடக்க முடியாமல் படுத்த 45 வயது மதிக்கத்தக்க பெண் யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் பெண் யானையின் குட்டி பாதிக்கப்பட்ட யானையின் பக்கத்திலேயே பரிதவித்து நின்று கொண்டுள்ளது பார்ப்போர் மனதையும் கலங்க செய்கிறது.