
கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழையால் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள பெரியார் நீர்வீழ்ச்சி, மேகம் செருக்கலூர் நீர்வீழ்ச்சிகளில் அதிக அளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்தப் பகுதிகளுக்கு விழுப்புரம், திருவண்ணாமலை, புதுச்சேரி, சேலம், கடலூர் உட்பட பல மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருவார்கள்.
அதேபோல் நேற்று (08.11.2021) காலை திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகன் சுரேஷ் (11) மற்றும் அவரது உறவினர்கள் பூமிநாதன், வெங்கடேஷ், சதீஷ் ஆகிய 4 பேரும் இரண்டு இருசக்கர வாகனங்களில் கல்வராயன் மலையைச் சுற்றிப் பார்க்க வந்துள்ளனர். அப்போது செருக்கலூர் நீர்வீழ்ச்சி அருகே வந்தபோது சிறுவன் சுரேஷை அமர வைத்துவிட்டு மற்ற மூவரும் நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்றுள்ளனர். குளித்துவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது சுரேஷை காணவில்லை. அவரைத் தேடியபோது நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டும் இடத்தில் இறங்கிச் சென்றதாக தெரிகிறது.
நீர்வீழ்ச்சியில் குளிக்கும் ஆர்வத்தின் காரணமாக சிறுவன் சுரேஷ் குளிக்கச் சென்றபோது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து கரியாலூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் துரை ராஜ் உள்ளிட்ட போலீசார் சங்கராபுரம் தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவன் சுரேஷை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அண்மையில் பெய்த மழையின் காரணமாக நீர்நிலைகளில் சிறுவர்கள், பெரியவர்கள் உட்பட பலர் இறக்கும் சம்பவம் அதிகரித்துவருகிறது.