தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஃபெஞ்சல் புயல் மற்றும் பெரு மழையால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவிகள் மற்றும் மறு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் விழுப்புரம் மாவட்டத்தில் நாளையும் (06/12/2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பழனி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வரும் திங்கட்கிழமை முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.