ரோடு போடாமலே ரோடு போட்டதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்டு கைதானது, பேப்பர் அளவில் கடனுக்கு ரோடு போட்டதால் ரோடு போட்ட சில நாட்களிலேயே பெயர்ந்துபோனது, மழையில் தார் ரோடு கரைந்துபோனது, தார் கணக்கில் விதிமுறைகளைபின்பற்றாமல் பல நூறு கோடி ரூபாய் ஊழல் செய்தது, இதனை ஒப்பந்தகாரர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டணி அமைத்து மூடி மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டது என அரசு நிதியை நெடுஞ்சாலைத்துறை வீணாக்கி வருவதெல்லாம், அத்துறையினருக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் தெரிந்த விவகாரம்தான்!

Advertisment

இந்நிலையில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர் சங்கம், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கீழ்க்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளது.

Advertisment

Request to Transfer Highway Department Fund to Corona!

‘கரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக பல்வேறு வகையில் நீங்கள் (எடப்பாடி பழனிசாமி) நிதி திரட்டி வருகின்றீர்கள். இந்நேரத்தில், எங்களுக்கு தோன்றிய யோசனையை உங்களிடம் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். நெடுஞ்சாலைத்துறைக்கு 2020-2021 ஆண்டுக்கான சாலை மற்றும் பால பணிகள் கட்டுமானம் (ம) பராமரிப்பிற்கு சுமார் ரூ.7000 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யவிருப்பதாக தெரிய வருகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள சாலைகள், போக்குவரத்திற்கு பயன்படுத்தக்கூடிய வகையில் நல்ல நிலையிலேயே உள்ளன. சில கிராம சாலைகள் (மாவட்ட இதர சாலை) வேண்டுமானால் மோசமானவையாக இருக்கலாம். பொருளாதார நெருக்கடி மிகுந்த இந்தக் காலக்கட்டத்தில், குறிப்பிட்ட சாலைகளை சரிபண்ணுவதற்கு மட்டும் நடப்பு ஆண்டில் நிதி ஒதுக்கினால் போதுமானது. தற்போது, 2019-2020 ஆண்டிற்கான பணிகள்தான் நடந்து வருகின்றன. எனவே, 2020-2021 ஆண்டுக்கு, நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் (ம) பராமரிப்பு பணிகளுக்கு ஒதுக்கக்கூடிய நிதியை மறுபரிசீலனை செய்து, அந்நிதியை கரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என வேண்டுகிறோம்.’

Advertisment

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணிகளின் மூலம் யார் யாரெல்லாம் பலனடைகிறார்கள் என்பது தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர் சங்கத்தினருக்கு நன்றாகவே தெரியும். ஒரே ஒரு ஆண்டாவது அந்த பலனை விட்டுக்கொடுத்து, கரோனா காலத்தில் மக்களுக்குப் பயன்படசெய்யலாமே என்ற ஆதங்கத்தில்தான், தமிழக முதல்வருக்கு அச்சங்கத்தினர் கடிதம் எழுதியிருக்கின்றனர்.

‘ரொம்பவும் குசும்புதான்..’ என, இக்கடிதம் குறித்து நெடுஞ்சாலைத்துறை வட்டத்தில் ‘கமெண்ட்’ அடிக்கின்றனர்.