/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/42_74.jpg)
இந்திய ரயில்வே துறை அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தில் நாடு முழுவதும் 1,309 ரயில் நிலையங்களை நவீனப்படுத்தும் பணியை செய்து வருகிறது. இதில் பயணிகளுக்கு உலகத் தரத்தில் வசதிகளை வழங்கவும், சுகமான பயண அனுபவங்களை பெருவதற்கும், பயணிகளுக்கு ரயில் நிலையங்களில் அனைத்து வசதிகளும் கிடைப்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் திருச்சி ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட சிதம்பரம் மற்றும் விருதாச்சலம் ரயில் நிலையங்கள் நவீனப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு 6 கோடி மதிப்பில் ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த மேம்படுத்தும் பணியில் ரயில் நிலைய கட்டிடம், பிரம்மாண்டமான நுழைவாயில், சாலை வசதிகள், வாகன நிறத்தும் இடங்கள், நடைபாதை, சுலபமான வழிகள், நவீன கழிவறைகள், மாற்றுத்திறனாளிக்கான சாய்வு தல வழி, பார்வையற்றோர் தொட்டு உணரும் வகையில் தொடுதளம். நடைமேடைகளில் இருக்கை வசதிகள், குடிநீர், தங்குமிடங்கள், எல்இடி விளக்குகள், வழிகாட்டு பலகைகள், பயண தகவல்களை துல்லியமாக அறிய எலக்ட்ரானிக் டிஸ்ப்ளே பலகைகள் உள்ளிட்டவைகள் அமைப்பதற்கான திட்டங்கள் இதில் வகுக்கப்பட்டுள்ளது.
ஆனால் சிதம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இந்த பணிகள் மெத்தனமாகவும், மிகவும் தரமற்ற முறையில் நடைபெறுவதாகவும் பயணிகள் மத்தியில் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதனையறிந்த சிதம்பரம் நகர்மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன் சிபிஎம் கட்சியினருடன் ரயில் நிலையத்தில் நடைபெறும் பணிகளை பார்வையிட்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம், “மழைக்காலங்களில் புதியதாக அமைக்கப்பட்ட நுழைவாயிலின் மேல் தளத்திலிருந்து தண்ணீர் கசிவு ஏற்பட்டு கீழே விழுகிறது. இதனால் நுழைவு வாயில் வழியாக செல்லும் பயணிகள் மீது தண்ணீர் பட்டு அவர்களின் உடைகள் நனைந்து சேதமாகிறது. நடைமேடைகளில் உள்ள தகர ஷீட்டுகளில் மழைநீர் அப்படியே நடைமேடையில் விழுகிறது. இதனால் பயணிகள் மழைக்காலங்களில் நடைமேடையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் பல பணிகள் தரமற்ற முறையில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஓய்வு அறையில் உள்ள ஜன்னல் கண்ணாடிகளில் கருப்பு கலர் ஸ்டிக்கர் ஒட்டாததால் பெண்கள் அறையின் உள்ளே உடை மாற்றுவது வெளியே இருப்பவர்களுக்கு தெரியும் வகையில் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் ஓய்வு அறையில் பெண்கள் தூங்கும் போது ஜன்னல் கண்ணாடி வழியாக பார்த்து அவர்களின் உடமைகள் திருடும் சூழல் உள்ளது. அவர்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் ஏற்படுவதற்கு முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு பெண் பயணிகள் பணியில் உள்ள ரயில்வே ஊழியர்களிடம் புகார் கூறியுள்ளனர். ஆனால் இதுவரை நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே சம்பந்தபட்ட ரயில்வே துறையின் மண்டல பொதுமேலாளர், பாதுகாப்பு ஆணையர் ரயில் நிலையத்தை மேம்படுத்தப்படும் பணிகளை ஆய்வு மேற்கொண்டு தரமற்ற பணிகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தரமான முறையில் பணிகள் நடப்பதை உறுதிப்படுத்தவேண்டும்” என கூறினார். இவருடன் சிஐடியு அமைப்பின் மாவட்ட நிர்வாகி சங்கமேஸ்வரன், சிஐடியு ஆட்டோ சங்க நிர்வாகி மாரியப்பன் உள்ளிட்ட கட்சியினர் உடன் இருந்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)