Skip to main content

எல்.இளையபெருமாளுக்கு அறிவித்த நினைவரங்கத்தை மணிமண்டபமாக அமைக்க கோரிக்கை

Published on 19/04/2023 | Edited on 19/04/2023

 

nn

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் எல்.இளையபெருமாளுக்கு சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவரங்கம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆலோசனை கூட்டம் சிதம்பரம் கீழவீதியில் நடைபெற்றது. 

 

இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத் தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான கே.ஐ.மணிரத்னம் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பாராளுமன்ற தொகுதி செயலாளர் செல்லப்பன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் செந்தில்குமார், மாநில இளைஞரணி முன்னாள் நிர்வாகி கமல் மணிரத்னம், இளஞரணி நிர்வாகி அரவிந்த், காங். கட்சியின் நிர்வாகிகள் கஜேந்திரன், தமிழரசன், வினோபா, இளைய அன்பழகன், சத்தியமூர்த்தி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு இளையபெருமாள் அடித்தட்டு மக்கள் வளர்ச்சிக்கு எவ்வாறு பாடுபட்டார் என்று பேசினார்கள்.  

 

இதனைத் தொடர்ந்து கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் மணிரத்னம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் இளையபெருமாளுக்கு நூற்றாண்டு நினைவரங்கம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்துள்ளதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். நினைவரங்கம் என்பதை மாற்றி நூற்றாண்டு விழா மணிமண்டபம் அமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுகிறோம். மணிமண்டபத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்து திறந்து வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். அடித்தட்டு மக்களுக்காக பாடுபட்ட எல்.இளையபெருமாளுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மாவட்ட அமைச்சர்களான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வி.கணேசன் ஆகியோரை வரவழைத்து காட்டுமன்னார்கோவிலில் நூற்றாண்டு விழாவை மாபெரும் விழாவாக நடத்த வேண்டும்.

 

கடலூர் மாவட்ட திமுக அமைச்சரான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் காட்டுமன்னார்கோவிலில் இளையபெருமாள் சிலை வைக்க அரசாணை பெற்று தந்தார். அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல் சட்டப்பேரவையில் இந்த மாவட்டத்தில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வி.கணேசன் ஆகியோரும் இளையபெருமாளுக்கு புகழாரம் செலுத்தியுள்ளார்கள். சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் ஜூன் 24 ஆம் தேதி நூற்றாண்டு விழா தொடங்கி ஒரு மாதக் காலத்திற்கு தொடர்ச்சியாக நடத்த ஏற்பாடு செய்யவுள்ளோம். ஒவ்வொரு கிராமத்திலும் விழா எடுத்து இளைய சமுதாயத்தினர் அவரது புகழைக் கொண்டு செல்ல வேண்டும். மேலும் 1940 ஆம் ஆண்டு தேசிய தலைவர்களுடன் இளையபெருமாள் பங்காற்றிய நிகழ்வுகள் உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்த புகைப்பட கண்காட்சியை சிதம்பரம் தனியார் மண்டபத்தில் நடத்த உள்ளோம்'' எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்