Skip to main content

ரேஷன் கடையைப் பிரிக்க வேண்டுகோள்... கடையை மூடிய அதிகாரிகள்!

Published on 12/11/2020 | Edited on 12/11/2020

 

Request to separate ration shop; Officers closed the store


திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் கற்பகம் கூட்டுறவு நியாய விலைக்கடை உள்ளது. இந்த கடைக்குத் தினமும் நூற்றுக்கும் அதிகமான பொதுமக்கள் வந்து ரேஷன் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். 10 நாட்களிலேயே பொருட்கள் காலியாகிவிட்டது என விற்பனையாளர் கூறுவிடுகிறாராம். அதோடு, அதிகமான கார்டுகள் இருந்தால் கடையை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்பது அரசின் விதி. அந்த விதியைக் காரணம் காட்டி நியாயவிலைக்கடையை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துவந்துள்ளனர்.

 

அதிகாரிகளும் நியாயவிலைக்கடையை இரண்டாகப் பிரித்து அதே நேதாஜி நகரில் உள்ள மற்றொரு பகுதியில் திறக்கப்படும் என வாக்குறுதி தந்துள்ளனர். இந்நிலையில் இந்தவாரம் கடையைப் பிரிக்காமல் கடையையே முழுவதுமாக வேறு இடத்துக்கு மாற்றியுள்ளனர் அதிகாரிகள்.

 

இதுதெரியாத மக்கள் கடையைப் பிரித்து இங்கிருந்து பொருட்களை எடுத்துச் செல்கிறார்கள் என நினைத்து, அமைதியாக இருந்துள்ளனர். தற்போது இரண்டு நாட்களாக கடையைத் திறக்காமல் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியாகி, விசாரித்தபோதுதான் கடை மாற்றப்பட்ட விவரம் தெரியவந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


அதனைத் தொடர்ந்து நவம்பர் 12 -ஆம் தேதி காலை, கடையை முழுவதுமாக வேறு இடத்திற்கு மாற்றியதைக் கண்டித்தும், இப்பகுதி மக்களுக்குப் பழைய கடையில் பொருட்களை விநியோகம் செய்ய வலியுறுத்தியும், வாணியம்பாடி டூ ஆலங்காயம் செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். போலீஸார் வந்து சமாதானம் பேசினர், பின்னர் வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து பழைய இடத்திலும் கடையை நடத்த நடவடிக்கை எடுக்கிறோம் என வாக்குறுதி தந்ததால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்