ADVERTISEMENT

அங்கன்வாடிகளுக்கான சத்துணவு பொருட்களை மகளிர் சுய உதவிக் குழுவின் மூலம் வழங்க கோரிக்கை!

10:36 PM Dec 14, 2022 | suthakar@nakkh…

ADVERTISEMENT


புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளாக அரசின் சில திட்டங்கள் மகளிர் மேம்பாட்டுத் துறையின் மூலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் புதுச்சேரி, காரைக்கால் அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்படும் சத்துணவு பொருட்கள் முழுவதும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் பொருட்களைப் புதுச்சேரி அரசு தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ADVERTISEMENT

அதையடுத்து அங்கன்வாடி மையங்களுக்கு சத்துணவு பொருட்கள் வழங்கி வந்த மகளிர் சுய உதவி குழுவினர், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனிடையே மீண்டும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமே வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இயக்குநரிடம் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறையினர் கோரிக்கை மனுவை வழங்கினர். அம்மனுவில், ' புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளாகப் புதுச்சேரி அரசின் சில திட்டங்கள் மகளிர் மேம்பாட்டுத் துறையின் மூலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதனடிப்படையிலேயே புதுச்சேரி, காரைக்கால் அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்படும் சத்துணவு பொருட்கள் முழுவதும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலம் வழங்கப்பட்டு வந்தது. மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் பொருட்களைத் தற்போது புதுச்சேரி அரசு தனியார் நிறுவனத்திற்குத் தாரை வார்க்க முயல்வதை நாம் தமிழர் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. புதுச்சேரி அரசின் இத்தகைய நடவடிக்கையினை எதிர்த்து மகளிர் சுய உதவி குழுக்களின் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி சுரேஷ்குமார் அவர்களால் புதுச்சேரி அரசின் நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

புதுச்சேரி அரசின் வேளாண்துறை அமைச்சர் நீதிமன்ற தீர்ப்பின் உத்தரவினை அவமதிக்கும் விதமாக, சட்டத்திற்கு முரணாக பாசிக் நிறுவனத்தின் வழியாக தனியார் நிறுவனம் மூலம் அங்கன்வாடி மையங்களுக்கு சத்துணவு பொருட்களை வழங்குவதனை நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை வன்மையாக கண்டிக்கிறது. புதுச்சேரி அரசின் இத்தகைய செயல்பாடு நீதிமன்ற தீர்ப்பினை அவமதிக்கும் செயலாகும். மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்பட்டு வந்த சத்துணவு பொருட்களை மகளிர் சுய உதவிக் குழுக்களே தொடர்ச்சியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கௌரி, " சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் இடைக்கால உத்தரவினை மதித்து மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக அங்காடி மையங்களுக்கு சத்துணவு பொருட்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மக்களைத் திரட்டி போராட்டத்தினை முன்னெடுக்கும்" என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மகளிர் பாசறை பொருளாளர் தேவிகா திருக்குமரன், நாம் தமிழர் கட்சி வில்லியனூர் தொகுதி கிருஷ்ணமூர்த்தி, வீராசாமி, நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தின் மாநிலச் செயலாளர் இரமேசு, திருபுவனை தொகுதி தலைவர் செயக்குமார், L&T தொழிலாளர் கிருஷ்ணமூர்த்தி, செகதீசன், இராமதாசன், முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT