Request to cage the leopard

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் இரியபுரம் கிராமம் உள்ளது. வனப்பகுதியில் இந்த கிராமம் அமைந்துள்ளதால் இப்பகுதி மக்கள் பெரும்பாலானோர் ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளை அதிகளவில் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை ஒன்று வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து கால்நடைகளைத் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. இதனால் கிராம மக்கள் அதிர்ச்சியிலிருந்து வந்துள்ளனர்.

Advertisment

இந்நிலையில் இதே கிராமத்தைச் சேர்ந்த மாதேவம்மா என்பவர் தனது வீட்டின் பின்பகுதியில் மாடுகளை வளர்த்து வந்தார். இரவு நேரத்தில் மாட்டுத்தொட்டியில் மாடுகளை கட்டி வைப்பது வழக்கம். நேற்று இரவும் வழக்கம் போல் மாடுகளை மாட்டுத் தொட்டியில் கட்டி வைத்திருந்தார். அப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை மாதேவம்மா பசு மாட்டை அடித்து கொன்றது. மாடுகளின் அலறல் சத்தம் கேட்டு மாதேவம்மா மற்றும் அக்கம் பக்கத்தினர் வெளியே வந்து பார்த்தபோது சிறுத்தை மாட்டை கொன்றது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

Advertisment

இதுகுறித்து பகுதி மக்கள் கூறும் போது, 'இரியபுரம் வனப்பகுதி ஒட்டி அமைந்துள்ள கிராமம் என்பதால் கால்நடைகளை அதிக அளவில் வளர்த்து வருகிறோம். ஆனால் கடந்த சில நாட்களாகவே சிறுத்தை ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி எங்கள் கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. நேற்று இரவு கூட ஒரு பசுமாட்டை சிறுத்தை அடித்துக் கொன்றுள்ளது. இதனால் எங்கள் ஊரைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் அச்சத்தில் உள்ளனர். எனவே தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும். மேலும் வனப்பகுதி ஒட்டி கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும்' என்றனர்.