பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் இடிக்கப்பட்ட பொங்கல் மண்டபத்தை மீண்டும் கட்ட வேண்டுமென்ற கோரிக்கையை எட்டு வாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட அருள்மிகு அங்காளம்மன் கோவில் உள்ளது. அங்காளம்மனை தரிசிப்பதற்காகவும், ஊஞ்சல் சேவையில் கலந்து கொள்வதற்காகவும் ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் மேல்மலையனூரில் கூடுகின்றனர்.

 Request to build Pongal Hall at Melmalayanur Temple

தங்களது வேண்டுதல்களுக்காக பக்தர்கள், சர்க்கரை பொங்கல் வைத்து வழிபடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

Advertisment

இந்நிலையில், பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்பட்டிருந்த அடுப்புகளுடன் கூடிய பொங்கல் மண்டபம், எவ்வித காரணமும் இல்லாமல் விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையால் இடிக்கப்பட்டது.

அப்போது முதல் அங்காளம்மனுக்குப் படைக்கக்கூடிய பிரசாதத்தை சுகாதாரம் இல்லாத இடத்திலும், பலருக்கு இடையூறாக இருக்கும் இடத்திலும் தயார் செய்யும் நிலைக்கு பக்தர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால், நிரந்தரமான ஒரு இடத்தில் பொங்கல் மண்டபம் அமைக்கக் கோரி அங்காளம்மனின் பக்தையான சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த எஸ்.நாகஜோதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Advertisment

melmalaiyanur

அந்த மனுவில், இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், விழுப்புரம் மாவட்ட இணை ஆணையர், கோயில் செயல் அதிகாரி ஆகியோருக்கு மனு அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு, மனுதாரரின் கோரிக்கையை 8 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசு, இந்து சமய அறநிலைத்துறை, கோயில் நிர்வாகத்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.