Renovation work on Bharathi damaged birthplace slows down

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் பிறந்த இல்லத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், எந்தவித சீரமைப்பு பணிகளும் நடைபெறாமல் முடங்கி கிடக்கிறது. தமிழக அரசு தனிக் கவனம் செலுத்தி பாரதி பிறந்த இல்லத்தில் மறு சீரமைப்பு பணிகளை விரைந்து தொடங்க வேண்டுமென பாரதி அன்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1973-ம் ஆண்டு முதல்வராக இருந்த கலைஞர் எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் பிறந்த வீட்டை அரசு சார்பில் விலைக்கு வாங்கி சி.பா.ஆதித்தனார் தலைமையில் 12.5.1973-ம் தேதி நடந்த விழாவில் பாரதியார் பிறந்த இல்லத்தை வரலாற்றுச் சின்னமாக அறிவித்து திறந்து வைத்தார். செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் பாரதி பிறந்த வீடு தற்போது பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த இல்லம் காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டிருக்கும். இங்கு பகுதி நேர நூலகமும் செயல்பட்டு வந்தது.தினமும் சராசரியாக 500க்கும் மேற்பட்ட நபர்கள் வருகை தருவார்கள். விடுமுறை நாட்களில் பார்வையாளர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Advertisment

Renovation work on Bharathi damaged birthplace slows down

இந்நிலையில் மார்ச் 25 ஆம் தேதி மாலை 6 மணியளவில் பார்வையாளர் நேரம் முடிவடைந்தவுடன், இல்லத்தின் காப்பாளர் மகாதேவி, கதவுகளை அடைத்த சிறிது நேரத்தில் பாரதியார் இல்லத்தின் முன்பக்க மேல்மாடி திடீரென இடிந்து கீழே விழுந்தது. இதனால் தரை தளத்தின் மேற்கூரையும் இடிந்து, அதிலிருந்து கற்கள் மரக்கட்டைகள் விழுந்தன. இதன் காரணமாக பாரதியார் இல்லத்தின் வரவேற்பு அறையில் இருந்த மேஜை, நாற்காலி, புகைப்படங்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன. நூற்றாண்டு பழமையான அந்த இல்லத்தின் மேல் தளத்தின் மேற்கூரையில் தேங்கியிருந்த மழைநீர் மற்றும் நீர்க்கசிவு காரணமாக இடிந்து விழுந்ததை தொடர்ந்து அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ. வி. மார்க்கண்டேயன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், பொறியாளர்கள் விரைந்து வந்து சேதமடைந்த இல்லத்தை உடனடியாக நேரில் பார்வையிட்டு ஆய்வும் செய்தனர்.

பழமை மாறாமல் மறு சீரமைப்பு பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு புதுப்பிக்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மூன்று மாதங்கள் கடந்தும் தற்போது வரை அங்கு எந்தவித மறுசீரமைப்பு பணிகளும் நடைபெறவில்லை. சேதமடைந்த அடுத்த நாள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்து மேற்கூரையை முழுமையாக இடித்து அப்புறப்படுத்திவிட்டு வீட்டின் முகப்பில் சவுக்கு கம்புகள் கட்டி தடுப்புகள் ஏற்படுத்தி அதில் வலைகளை பொருத்தி விட்டு சென்றனர். அத்தோடு பணிகள் எதுவும் அந்த வீட்டில் நடைபெறாமல் முடங்கி கிடக்கிறது. பாரதி பிறந்த இல்லத்தை காண நாள்தோறும் வருகை தரும் மாணவ மாணவிகள், பாரதி அன்பர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

Advertisment

Renovation work on Bharathi damaged birthplace slows down

இது குறித்து பாரதி முற்போக்கு வாலிபர் சங்க நிர்வாகி பாலமுருகன் கூறுகையில், “மகாகவி பாரதியார் பிறந்த வீடு இடிந்து விழுந்து மறு சீரமைப்பு பணிகள் எதுவும் நடக்காமல் அப்படியே முடங்கி கிடக்கிறது. இது பாரதி அன்பர்களை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது. அரசாணை வெளியீடு, டெண்டர் அறிவிப்பு என துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மற்ற அரசு பணிகளைப் போல மந்த கதியில் நடக்காமல், பாரதி பிறந்த வீட்டை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் தனி கவனம் செலுத்த வேண்டும். செப்டம்பர் 11 இல் பாரதி நினைவு தினம் வருகிறது. அதற்கு முன்பாக போர்க்கால அடிப்படையில் பாரதி பிறந்த இல்லத்தில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

Renovation work on Bharathi damaged birthplace slows down

இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், புராதான கட்டடங்களை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக ரூபாய் 150 கோடி மதிப்பீட்டில் 17 திட்டங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு அதற்கான அறிவிப்பு கடந்த பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மகாகவி பாரதியார் பிறந்த இல்லமும் புனரமைப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அரசாணை வெளியிடப்பட்டு அதன் தொடர்ச்சியாக ஜூலை மாதத்தில் டெண்டர் விடப்படும். அதன் பிறகு தான் வழக்கம் போல பணிகள் தொடங்கும் என தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் - எஸ்.மூர்த்தி