Removal of lake occupations

கடந்த நக்கீரன் இதழில் ‘ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் நீர்நிலைகள்.. மீட்குமா அரசு’ என்ற தலைப்பில் இரண்டு பக்க செய்தி வெளியானது. இந்தச் செய்தி எதிரொலியாக பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள், ஏரி, குளம், கால்வாய் போன்ற பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை முடுக்கிவிட்டுள்ளனர். அதற்கு உதாரணமாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி, ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலைகளை மீட்கும் பணியில் வருவாய்த்துறையினரை முடுக்கி விட்டுள்ளார்.

Advertisment

ஆண்டிமடம் தாலுகா, திருக்களப்பூர் பகுதியில் சுமார் 98 ஏக்கர் பரப்பளவில் உள்ள பெரிய பாசன ஏரி ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. இந்த ஏரி நிரம்பி இதன் மூலம் திருக்களப்பூர், நெட்ளாம்பாக்கம், ஆகிய கிராமங்களில் 3000 ஏக்கர் பாசன வசதி பெறும். இந்த ஏரி தனிநபர்கள் ஆக்கிரமிப்பு பிடியில் இருந்துள்ளது. அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி உத்தரவிட்டார்.

Advertisment

அதனைத் தொடர்ந்து ஆண்டிமடம் வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் வருவாய்த் துறையினர் பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு ஏரி ஆக்கிரமிப்பை அகற்றி கரையை சீரமைக்கும் பணியை செய்து வருகிறார்கள். இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஆண்டிமடம் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி, “ஏரி, குளம் உட்பட நீர் வழி பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அரசு ஊழியர்கள் அலுவலர்கள் பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். மேலும் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட ஏரிகளை மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.