கடலூர் மாவட்டம் விருத்தாசலம்-கடலூர் நெடுஞ்சாலையில் கோட்டாட்சியர் அலுவலகம் எதிர்புறம் 4.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட முல்லா ஏரி பகுதி மற்றும் கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள 1.25 ஏக்கர் ஏரி நீர் பிடிப்பு தாங்கல் பகுதிகள் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆக்கிரமிப்பு செய்து 150-க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் என கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
ஏரியையும், ஏரி பகுதியையும் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக விருத்தாசலத்தை சேர்ந்த தடயம் பாபு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதன்படி கடந்த 2018, ஜனவரி 10ம் தேதி முல்லா ஏரிப்பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு, நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் ஆக்கிரமிப்புகளை அகற்றாதது குறித்து 2021 நவம்பர் மாதம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதன்பேரில், வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றி அதன் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சென்னை நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டது.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறையினர் பலமுறை நோட்டீஸ் அளித்தும் ஆக்கிரமிப்பாளர்கள் அதனை அகற்றவில்லை. இதனால் வட்டாட்சியர் தனபதி, நகராட்சி ஆணையாளர் சேகர், ஏ.எஸ்.பி அங்கித் ஜெயின் அடங்கிய அதிகாரிகள் குழுவினர் கடந்த 23-ஆம் தேதி முதல் முல்லா ஏரி பகுதியில் உள்ள கட்டிடங்களை அகற்றும் பணியில் களமிறங்கினர். முதற்கட்டமாக கடைகளின் முகப்பு பகுதிகள் மட்டும் இடிக்கப்பட்டன. மேலும் ராட்சத இயந்திரம் மூலம் கட்டிடங்கள் முழுவதும் இடிக்கப்படும் என எச்சரித்து சென்றனர்.
அதன்படி நேற்று ஐந்தாவது நாளாக அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் தொடர்ந்து ஜே.சி.பி இயந்திரத்தில் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்பதால், குடியிருப்புவாசிகள் மற்றும் வியாபாரிகள் ஆக்கிரமிப்பு கட்டிடங்களிலிருந்து மின்சாதன பொருட்கள் உள்ளிட்ட உடமைகளை தாங்களாகவே அப்புறப்படுத்தினர்.
இந்நிலையில் திடீரென்று இந்திரா நகர் பகுதியிலிருந்து இருபதுக்கும் மேற்பட்டோர் மண்ணெண்ணெய் கேன் எடுத்து வந்து விருத்தாசலம்-கடலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மண்ணெண்ணெய்யை மேலே ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் தடுக்க முற்பட்டபோது இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஐந்தாறு நபர்கள் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பாதுகாப்புப் பணியிலிருந்த மகளிர் காவல் நிலைய அதிகாரி அமுதாவின் கண்ணில் மண்ணெண்ணெய் ஊற்றியதால், கண்ணெரிச்சல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். பின்னர் சக காவல்துறையினர், அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் வட்டாட்சியர் தனபதி மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் வருகின்ற 29 ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டதால் அனைவரும் கலைந்து சென்றனர்.
தங்களுக்கு மாற்றுக் குடியிருப்பு வழங்க வேண்டும் என்றும், தங்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக கேள்விக்குறியாக விட்டதாகவும் தெரிவித்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-08/n795.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-08/n792.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-08/n794.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-08/n793.jpg)