Advertisment

ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்; கடை உரிமையாளர்கள் போராட்டம்

Removal of encroachment shops; Shop owners struggle

Advertisment

ஈரோட்டில் இன்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 300க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்ட நிலையில் அதிகாரிகளுடன் ஜவுளிக்கடை உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் இருந்து மணிக்கூண்டு வழியாக சத்தி ரோடு சந்திப்பு எல்லை மாரியம்மன் கோவில் வரையிலான சாலையில் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகள் உள்ளன. குறிப்பாக பன்னீர்செல்வம் பார்க்கில் இருந்து மணிக்கூண்டு வரை சாலையின் ஒரு பகுதியில் தற்காலிகமாக ஜவுளிக் கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் செய்யப்பட்டு வந்தது. இதனால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இந்த சாலை வழியாகத்தான் ஈரோடு பஸ் நிலையத்திற்கு வாகனங்கள் செல்கின்றன. இதனால் இந்த சாலை முக்கிய போக்குவரத்தாக இருந்து வருகிறது. சாலை ஆக்கிரமிப்பால் பாதசாரிகள் நடந்து செல்லக்கூட முடியாத நிலை காணப்பட்டு வந்தது.

மேலும் அப்பகுதியில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள மாநகராட்சி ஜவுளி வணிக வளாகம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளதால், மேலும் அப்பகுதியில் கடுமையான நெருக்கடி ஏற்படும் என்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்துக்கு ஏராளமான புகார்கள் சென்றது. இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. எனினும் தொடர்ந்து ஆக்கிரமிப்பு இருந்து வந்தது.

Advertisment

இதையடுத்து இன்று காலை மாநகராட்சி தலைமை பொறியாளர் விஜயகுமார், நகர்நல அலுவலர் பிரகாஷ், உதவி ஆணையாளர் பாஸ்கர், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் சேகர் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் பன்னீர்செல்வம் பார்க்கில் இருந்து மணிக்கூண்டு செல்லும் சாலையை முழுமையாக அடைத்தனர். இதைத் தொடர்ந்து பொக்லைன் எந்திரம் கொண்டுவரப்பட்டு சாலையோரம் இருபுறங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றினர். எல்லை மாரியம்மன் கோவில் வரை 1 கிலோமீட்டர் தூரத்திற்கு மேலாக சாலையோரத்தில் இருந்த 300க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன.

கடைகள் அகற்றப்பட்டதை அறிந்த ஜவுளி வியாபாரிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, பொக்லைன் எந்திரம் முன்பாக சாலையில் படுத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையையடுத்து கலைந்து சென்றனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் 150 பேர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் 30 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். இன்ஸ்பெக்டர் தெய்வராணி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பன்னீர்செல்வம் பார்க்கில் இருந்து மணிக்கூண்டு செல்லும் சாலையானது அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாநகராட்சி நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் ஜவுளிக் கடைகள் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாநகரின் பிற பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ள பிற பகுதிகளிலும் இதேபோல ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளது' என்றனர்.

Erode police shops
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe