Skip to main content

ஆக்கிரமிப்புகள் அகற்றம்; வனத்துறை விளக்கம்!

Published on 12/05/2024 | Edited on 12/05/2024
Removal of encroachment Forestry explanation

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே உள்ள பென்னாகரம் வனப்பகுதிக்கு உள்பட்ட பேவனூா் காப்புக்காடு பகுதியில் வேப்பமரத்துகொம்பு என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அப்பகுதியில் குடியிருந்து வருபவா்களை அங்கிருந்து வெளியேறுமாறு வனத்துறையினா் பலமுறை அறிவுறுத்தியுள்ளனர். இத்தகைய சூழலில் வேப்பமரத்துகொம்பு பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் என்பவருக்கு வனத்துறையின் மூலம் வனப் பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட தகர கொட்டகை மற்றும் சிறிய அளவிலான ஓட்டு வீட்டை விட்டு வெளியேறுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனையடுத்து தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டால் கிராம மக்கள் அனைவரும் வனப் பகுதியிலிருந்து வெளியேறுவதாக வனத் துறையினரிடம் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து பென்னாகரம் வனச்சரக அலுவலா் செந்தில்குமார் தலைமையிலான வனத் துறையினா், ஒகேனக்கல் காவல் துறையினா் நேரடியாக வேப்பமரத்துகொம்பு கிராமத்திற்குச் சென்று கிருஷ்ணன் என்பவரின் வீட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். கிராம மக்கள் அதைத் தடுக்க முயற்சித்த போது வனத் துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது தொடர்பான  சர்ச்சைக்குரிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றியது தொடர்பாக தருமபுரி மாவட்ட வனத்துறை  சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “பென்னாகரம் வனச்சரகம் பேவனூர் காப்புக்காட்டில் மணல் திட்டு பகுதியில் கிருஷ்ணன் என்பவர் அத்துமீறி நுழைந்து தகர கொட்டகை அமைத்துள்ளார். உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படியும்,  தமிழ்நாடு வனச்சட்டப்படியும் தகர கொட்டகை, சிறிய ஓட்டு வீடு ஆகிய ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. மேலும் கொட்டகை இருந்த இடம் யானை வலசை செல்லும் பாதை ஆகும். அதே சமயம் வனப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்த கிருஷ்ணன் பூர்வகுடிகள் அல்ல. கிருஷ்ணனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பென்னாகரம் பகுதியில் விளை நிலங்களும், வீட்டு மனையும் உள்ளன” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்