Removal encroachment buildings Cuddalore

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆலடி சாலையில் நீரோடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள், விருத்தாசலம் - கடலூர் நெடுஞ்சாலையில் கோட்டாட்சியர் அலுவலகம் எதிர்புறம் 4.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட முல்லா ஏரி பகுதி மற்றும் கோட்டாச்சியர் அலுவலகம் அருகில் உள்ள 1.25 ஏக்கர் ஏரி நீர் பிடிப்பு தாங்கல் பகுதிகள், பல ஆண்டுகளுக்கு முன்பாகவேஆக்கிரமிப்பு செய்து 150-க்கும் வீடுகள், கடைகள் என கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

Advertisment

ஏரியையும், ஏரி பகுதியையும் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது தொடர்பாக விருத்தாசலத்தை சேர்ந்த தடயம் பாபு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதன்படி கடந்த 2018, ஜனவரி 10 ஆம் தேதி முல்லா ஏரிப்பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு, நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Advertisment

இருப்பினும் ஆக்கிரமிப்புகள் அகற்றாதது குறித்து 2021 நவம்பர் மாதம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதன்பேரில், வரும் ஆகஸ்டு 29-ஆம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றி அதன் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சென்னை நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறையினர் பலமுறை நோட்டீஸ் அளித்தும் ஆக்கிரமிப்பாளர்கள் அகற்றவில்லை.

Removal encroachment buildings Cuddalore

இந்நிலையில் ஏ.எஸ்.பி அங்கித் ஜெயின் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நேற்று(23.8.2022) தொடங்கியது.இதற்கு அப்பகுதி குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு தெரிவித்து, கால அவகாசம் கேட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என அதிகாரிகள் கூறி ஜே.சி.பி இயந்திரங்கள் உதவியுடன் ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம் குடியிருப்பு வாசிகள் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.