publive-image

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் காசிவிஸ்வநாதர் கோவில் மற்றும் சிக்கந்தர் தர்கா அமைந்துள்ளது. இந்த 2 புனிதத் தலங்களிலும் ஏராளமான பக்தர்கள் தினமும் வழிபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் தான், சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகளைப் பலியிடப்பட்டு விழா நடத்தப்படும் எனத் தர்கா நிர்வாகம் அறிவித்திருந்தது. இதற்கு இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதே சமயம் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி திருப்பரங்குன்றத்துக்கு வந்த போது மலையில் அமர்ந்தபடி சிலர் அசைவ உணவுகளைச் சாப்பிட்டதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் பரவின. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

Advertisment

இதையடுத்து, மலையின் புனிதம் கெட்டுவிட்டதாகக் கூறி நேற்று (04.02.2025) போராட்டம் நடத்த இருப்பதாக இந்து அமைப்பினர் அறிவித்ததிருந்தனர். இந்து அமைப்பு மற்றும் அதன் ஆதரவு அமைப்பினர் நடத்த உள்ள போராட்டத்திற்கு, காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. இத்தகைய சூழலில் தான் மதுரை மாவட்ட ஆட்சியர், 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனால் தடையை மீறி வெளி மாவட்டங்களில் இருந்து வந்த இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் தனியார் மண்டபங்களில் அடைக்கப்பட்டனர்.

Advertisment

இதற்கிடையே போராட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என இந்து அமைப்பினர் சார்பில் உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் முறையிடப்பட்ட நிலையில் நேற்று மாலை 5 மணியிலிருந்து 6 மணி வரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ளலாம் என நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனையடுத்து பல்வேறு பகுதிகளில் மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்த இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் விடுவிக்கப்பட்டு பழங்காநத்தம் பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர். உள்ளூர்ப் பகுதி மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபடவில்லை என்றாலும் பல்வேறு பகுதிகளில் இருந்து அங்கு வந்திருக்கும் வந்துள்ள இந்து அமைப்பினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பரபரப்பான சூழலில் தான் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கோயில், சிக்கந்தர் தர்காவிற்கு சென்று வழிபாடு செய்வதற்கு நேற்று பொதுமக்கள், பக்தர்கள், அரசியல் மற்றும் பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு பாதைகள் மூடப்பட்டன. இந்நிலையில் இன்று (05.02.2025) திருப்பரங்குன்றம் மலைக்குச் சென்று வழிபாடு இந்து மற்றும் இஸ்லாமியப் பக்தர்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளன. அதே சமயம் அரசியல் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் அனுமதி இல்லை என்றும் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

publive-image

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “காங்கிரஸ் கட்சியின் சார்பாக நாளை (06.02.2025) கட்சித் தலைவர்களோடு திருப்பரங்குன்றத்தில் ஆலய வழிபாடு செய்ய உள்ளோம். அதே சமயம் சிக்குந்தர் பாதுஷாவையும் வழிபட உள்ளோம். இந்த மத நல்லிணக்க வழிபாட்டை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இப்பொழுது பிரச்சாரம் செய்ய வேண்டிய கால கட்டாயத்தில் கட்டாயத்தில் உள்ளோம்” எனத் தெரிவித்தார்.