Relief of Rs.6,000; Control room system to clear doubts

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6000 வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிவாரணத் தொகையை நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நிவாரணத் தொகை வழங்குவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டது.

Advertisment

அதில், ‘சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் ஆகிய 3 வட்டங்களில் முழுமையாகவும், திருப்போரூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டம் முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய ஆறு வட்டங்களில் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன.

Advertisment

அதாவது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட, இரண்டு நாட்களுக்கு மேல் மழை வெள்ளம் சூழ்ந்து துணிமணிகள், பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் இழந்த குடும்பங்களுக்கு சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகள் மூலம் 6 ஆயிரம் ரூபாய்க்கான டோக்கன்கள் வழங்கப்படும்’ என அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரணத் தொகையாக ரூ. 6 ஆயிரம் பெறுவதற்கான டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரணத் தொகைக்கான டோக்கன் விநியோகப் பணியினை மேற்கொள்ளும் பொருட்டு ஞாயிற்றுக்கிழமை (17.12.2023) ரேஷன் கடைகள் இயங்கும் என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. மேலும் ரூ. 6 ஆயிரம் நிவாரண உதவி வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வேளச்சேரி அஷ்டலட்சுமி நகரில் தொடங்கி வைக்கிறார்.

Advertisment

இந்த நிலையில், நிவாரணத் தொகை வழங்குவது மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைத்தீர்ப்பதற்காகக் கட்டுப்பாட்டு அறை அமைத்துள்ளதாகத்தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணத் தொகையாக ரூ. 6000/- (ரூபாய் ஆறாயிரம் மட்டும்) வழங்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்க ஏதுவாக டோக்கன்கள் வீடு வீடாகச் சென்று விநியோகிக்கப்பட்டு வருகிறது. டோக்கன்கள் கிடைக்கப் பெற்றவர்கள்அதில் குறிப்பிட்ட தேதியிலும், நேரத்திலும், குறிப்பிட்டுள்ள நியாய விலைக் கடைக்குச் சென்று ரூ. 6000/- பெற்றுக்கொள்ளலாம். டோக்கன்கள் கிடைக்கப் பெறாத மற்றும் குடும்ப அட்டை இல்லாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நியாய விலைக் கடைகளில், அதற்கென உரிய படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேற்படி நிவாரணத் தொகையைபொதுமக்களுக்கு எவ்வித புகாருக்கும் இடமின்றி வழங்கிடவும், புகார் எழும் சூழலில்அதனை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அலுவலர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வு நல்கிடவும் ஏதுவாக சென்னை, சேப்பாக்கம் எழிலகத்தில் அமைந்துள்ள உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் / ஆணையாளர் அலுவலகத்தில் 17.12.2023 முதல், காலை 8.00 மணி முதல் இரவு 8.0 மணி வரை கட்டுப்பாட்டு அறை செயல்படும். பொதுமக்கள் நிவாரணத் தொகை குறித்த தங்களது சந்தேகங்களை 044-2859 2828 மற்றும் 1100 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்கள் வாயிலாகவும் தொடர்பு கொண்டு கேட்டறியலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளது.