Skip to main content

"மழையால் பாதிப்படைந்த பயிர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும்" - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

Published on 21/11/2022 | Edited on 21/11/2022

 

"Relief for rain affected crops will be provided soon" - Minister MRK Panneerselvam

 

69வது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழா கடலூர் மாவட்டத்தில் கடந்த 14ம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஒருவார காலமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதன் நிறைவு விழா நேற்று கடலூரில் நடைபெற்றது. விழாவுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நந்தகுமார் வரவேற்றார். சட்டமன்ற உறுப்பினர்கள் கடலூர் ஐயப்பன், நெய்வேலி சபா.ராஜேந்திரன், விருத்தாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

 

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் திலீப்குமார் திட்ட விளக்க உரையாற்றினார். விழாவில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு 4765 பயனாளிகளுக்கு ரூபாய் 25 கோடி மதிப்பிலான நிதி உதவிகளை வழங்கினர். இதில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர்க்கடன், மத்திய காலக்கடன், மாற்றுத்திறனாளிகளுக்கான கருணை கடன், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நிதி உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அத்துடன் கூட்டுறவு வார விழாவையொட்டி நடைபெற்ற கட்டுரை, ஓவியம், பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

 

விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில், “தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டுறவுத் துறையை டிஜிட்டல் மயமாக்கியுள்ளார். இதன் மூலம் விவசாயிகள் எளிதாக கடன் பெற முடிகிறது. இந்த ஆண்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள 159 கூட்டுறவு சங்கங்களில் 12,365 புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ரூபாய் 66 கோடி வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் கடன் பெற்றவர்கள் அதைத் திருப்பி செலுத்தாவிட்டாலும் அரசு நடவடிக்கை எடுக்கும்”  என்றார்.

 

அமைச்சர் சி.வெ.கணேசன் பேசுகையில், “தமிழ்நாட்டில் உள்ள 23 மத்திய கூட்டுறவு வங்கிகளும் லாபத்தில் இயங்கி வருகின்றன. இவ்வாறு லாபத்தில் இயங்குவது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான். கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விவசாயிகளுக்கு ரூபாய் 73000 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு(2023) ரூபாய் 12000 கோடி கடன் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார்.

 

ஆழ்துளை கிணறு அமைத்து மின் வசதி கிடைக்காத விவசாயிகள் நலன் கருதி ஒரு லட்சம் மின் இணைப்புகளை வழங்கினார். தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 13,000 டன் அரிசி கடத்தல் தடுக்கப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொற்கால ஆட்சி நடைபெற்று வருகிறது. அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்று வருகிறது" என்றார்.

 

நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தண்ணீர் வடிந்த பிறகு சேதங்கள் கணக்கெடுக்கப்படும். பயிர்கள் 33 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும். மகளிர் சுயஉதவி குழுவினருக்கு கடன்களை தள்ளுபடி செய்ய ஆய்வு நடைபெற்று வருகிறது. அதையும் விரைவில் தள்ளுபடி செய்ய முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சின்னத்தை முடக்க முயற்சிப்பது மோடியின் மோடி மஸ்தான் வேலை” - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Minister MRK Panneerselvam criticized BJP

தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி இந்தியா கூட்டணியின் சிதம்பரம் மக்களவைத் தொகுதி வேட்பாளரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதா ஆகியோரை ஆதரித்து சிதம்பரத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

இதற்காக சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள லால்புரம் என்ற இடத்தில் பிரம்மாண்ட மேடை மற்றும் பொதுக்கூட்ட பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வியாழக்கிழமை(28.4.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுக்கூட்ட மேடை அமைய உள்ள இடத்திற்கு வந்த அமைச்சர் பன்னீர்செல்வம், மேடை அமைந்துள்ள பகுதி, தொண்டர்கள் அமர உள்ள இடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை நடந்து சென்று பார்வையிட்டார். அப்போது மேடை அமைக்கும் பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சிதம்பரம் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தொல். திருமாவளவன், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வேட்பாளர் உள்ளிட்டோரை ஆதரித்து சிதம்பரத்தை அடுத்த புவனகிரி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட லால்புரம் பகுதியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். இதில் வாக்காளர்கள், பொதுமக்கள், தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். மாநாடு போன்று இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது.

முதலமைச்சர் நேரடியாகச் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். 3 ஆண்டு காலத்தில் செய்துள்ள சாதனைகள், பணிகள் குறித்து முதல்வர் பேசி வருகிறார். சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 75 ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். முந்தைய தேர்தலில் எதிர்க்கட்சியாக இருக்கும்போது மக்களைச் சந்தித்து வாக்கு கேட்டு 39 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம். இந்த ஆட்சியில் தனி நபர்கள் பண பலன்களைப் பெற்றுள்ளனர். ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை நேரடியாகச் செல்கிறது. மகளிருக்கு இலவச பேருந்து பயணம், மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் போன்ற திட்டங்கள் எந்த உலகத்திலும் இல்லை. பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காகக் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு உதவித்தொகை என அனைத்து உதவிகளும் நேரடியாக பயனாளிகளுக்குச் செல்கிறது.

திமுக கூட்டணி கொள்கை உள்ள கூட்டணி. இந்த கூட்டணிக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது. இது 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கேட்கும் சின்னங்களை முடக்குவதன் மூலமாக அவர்களது வெற்றியை தடுக்க முயற்சிக்கின்றனர். இது மோடியின் மோடி மஸ்தான் வேலை. இது எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கு செய்கின்ற வேலை. இந்த ஆட்சி இ.டி., சி.பி.ஐ போன்றவற்றை வைத்துக் கொண்டு ஆட்சி புரிகின்றார்கள். ஆனால் தமிழக முதலமைச்சர் மக்கள் நலத்திட்டங்களை செய்து விட்டு, அதை முன்னெடுத்து பிரச்சாரம் செய்து வருகிறார். மக்கள் சக்தியாக ஒன்று திரண்டு வெற்றி பெறச் செய்வார்கள். 100 நாள் வேலைத் திட்டத்தில் கூலியை உயர்த்தியது அவரது பயத்தை காட்டுகிறது. இவற்றையெல்லாம் பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள். திரண்டு வந்து திமுக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள்” எனக் கூறினார்.

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.