Skip to main content

சாலை விபத்து; உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
Relief  to the family of 4 people who died in a road accident near ecr road

தூத்துக்குடியிலிருந்து வேளாங்கண்ணிக்கு, கிழக்கு கடற்கரைச் சாலையில் ஒரு காரில் 11 பேர் சென்றுள்ளனர். இந்த நிலையில் இன்று அதிகாலை இந்த கார் தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் காவல் சரகம் மனோரா அருகே செல்லும்போது சாலை ஓரங்களில் வளர்ந்திருந்த சீமைக்கருவேல மரங்கள் சாலையை மறைத்து நின்றதால் வேகமாகச் சென்ற கார் சிறிய பாலத்தில் மோதியுள்ளது. அதி வேகமாக வந்த கார் மோதி விபத்திற்குள்ளானதில் அந்த காரில் பயணித்த பாக்கியராஜ் (62), ஞானம்பாள் (60), ராணி (40), சின்னப்பாண்டி (40) ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் இந்த கார் விபத்தில் மரிய செல்வராஜ் (37), பாத்திமா மேரி (31), சந்தோஷ்செல்வம் (7), சரஸ்வதி (50), கணபதி (52), லதா (40), சண்முகத்தாய் (53) ஆகிய 7 பேரும் படுகாயமடைந்துள்ளனர். அக்கம்பக்கத்தினர் இவர்களை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட போலீசார் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதிகாலையில் நடந்த இந்த கோர விபத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். 

இந்த நிலையில் இந்த சாலை விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணத் தொகை அறிவித்துள்ளார். அதன்படி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். விபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும், லேசான காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ. 25 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குத் தனது இரங்கலையும் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்