/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/14_98.jpg)
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே தனியார் பேருந்துகள் மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் 4 பேர் பலியாகி உள்ளனர். இவ்விபத்து அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் நிவாரணம் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே மேல்பட்டாம்பாக்கம் கிராமத்தில் இன்று காலை பண்ருட்டியிலிருந்து கடலூருக்குச் சென்ற தனியார் பேருந்தின் வலதுபுற முன் டயர் எதிர்பாராதவிதமாக வெடித்து கடலூரிலிருந்து பண்ருட்டி வந்த தனியார் பஸ் மீது மோதியதால் ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
இச்சம்பவத்தைக் கேள்விப்பட்டவுடன் கடலூர் மாவட்ட ஆட்சியரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு விபத்து நடந்த இடத்திற்கு சென்று தேவையான மீட்பு நடவடிக்கைகளையும், மருத்துவ உதவிகளையும் விரைந்து மேற்கொள்ள கேட்டுக்கொண்டேன். மேலும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தையும், தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசனையும் மருத்துவமனைக்கு நேரில் சென்று விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும். படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும், லேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா இருபத்தைந்தாயிரம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத்தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)